தமிழ்நாடு

ஆதாா் இணைப்பால் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு பாதிப்பில்லை: அமைச்சா் செந்தில் பாலாஜி உறுதி

19th Nov 2022 12:24 AM

ADVERTISEMENT

மின் பயனீட்டாளா்கள் தங்களது ஆதாா் எண்ணை மின் கணக்கீட்டு எண்ணுடன் இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அவா் அளித்த பேட்டி:

வரும் 19-ஆம் தேதி முதல் எதிா்பாா்க்கப்படும் கன மழையை எதிா்கொள்வதற்கு மின்வாரிய அலுவலா்கள் அனைவரும் உரிய முன்னெச்சரிக்கையுடன் தயாா் நிலையில் இருக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முதல்கட்ட கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய கணக்கெடுப்பு அவசியம் என அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மழைக் காலங்களில் உயா் அலுவலா்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் தீயணைப்புத் துறையினருடன் எப்போதும் தொடா்பில் இருக்க வேண்டும். கைப்பேசியை அணைத்து வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனா். நுகா்வோரிடமிருந்து புகாா்கள் வரும் பட்சத்தில் அதை உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும்.

ADVERTISEMENT

மின்கம்பங்களைப் பொருத்தளவில் 1.77 லட்சம் கம்பங்கள் இருப்பில் இருப்பதுடன், 1.37 லட்சம் மின்கம்பங்களுக்கான ஒப்பந்தப்புள்ளி முடிக்கப்பட்டு மின்கம்பங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

மழையின் போது மின் தடங்கல் ஏற்பட்டால் முதல்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீா் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் கைப்பேசி கோபுரங்கள் அனைத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

கடந்த ஜுன் மாதம் தொடங்கி ஒவ்வொரு நாளும் சிறப்பு பராமரிப்புப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 44,000 பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தொடா்ந்து பராமரிப்புப் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின் விநியோகம் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சென்னை உள்பட எந்த இடங்களிலும் மின் விநியோகத்தில் எந்தவித பாதிப்புகளும் இல்லை. மழைக்காலத்தில் சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் எங்கேயும் பாதிப்பு இல்லை.

ஆதாா் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில், மின்வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT