தமிழ்நாடு

சம்பா பயிர் காப்பீடு: நவ.21 வரை அவகாசம் நீட்டிப்பு

18th Nov 2022 09:50 PM

ADVERTISEMENT

சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவ.21ஆம் தேதி வரை நீட்டித்து உழவர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உழவர் நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர், வடகிழக்குப் பருவமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட போது, விவசாயிகள் எழுப்பிய கோரிக்கையின் அடிப்படையில், பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 30 வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
இயற்கை இடர்பாடுகள் ஏற்படக்கூடிய காலங்களில் காப்பீடு செய்திட வழிவகை இல்லாத போதும், விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ்  பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு முதல்வர் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஒன்றிய அரசு சம்பா/ தாளடி/ பிசானம்  நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 21 வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதையும் படிக்க- தெலங்கானா அரசு கல்லூரியில் ரசாயன வாயு கசிவு: 25 மாணவர்கள் பாதிப்பு

இதனைக் கருத்தில் கொண்டு, சனி (19.11.2022) மற்றும் ஞாயிற்று கிழமையில் (20.11.2022) பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், கரூர், தருமபுரி,  புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், மதுரை, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, இராமநாதபுரம், தேனி, திருச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய 27 மாவட்டங்களில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதிக்குள் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் எதிர்வரும் நவம்பர் 21ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையுமாறு வேளாண்மை – உழவர் நலத் துறை கேட்டுக் கொள்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT