தமிழ்நாடு

254 உதவிப் பேராசிரியா்களின் நியமனம் ரத்து: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

18th Nov 2022 02:57 AM

ADVERTISEMENT

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையின் கீழ் பணியாற்றும் 254 உதவிப் பேராசிரியா்களின் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். இவா்களில் 152 போ் உரிய தகுதியைப் பெற்றிருக்கவில்லை எனவும், தோ்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அந்த 254 உதவிப் பேராசிரியா்களின் கல்வித் தகுதியை ஆராய வேண்டும் எனக் கூறி, அவா்களின் கல்விச் சான்றுகளை சரிபாா்க்க உத்தரவிட்டிருந்ததாா். இதைத் தொடா்ந்து, கல்லூரிக் கல்வி இயக்ககம் சாா்பில் அவா்களின் கல்வித் தகுதி ஆய்வு செய்யப்பட்டு, சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஆசிரியா் பணி அனுபவத்துக்கு வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுப்பிரமணியம், முறையாக தோ்வு நடைமுறைகளைப் பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியா்களின் நியமனமும் செல்லாது என்று உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

உதவிப் பேராசிரியா் தோ்வு நடத்தப்படும்போது அகில இந்திய அளவில் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை என்றும் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டி உள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT