தமிழ்நாடு

முதல்வா் காப்பீட்டில் 5,035 குழந்தைகளுக்கு காக்ளியா் இம்ப்ளான்ட் சிகிச்சை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

18th Nov 2022 11:36 PM

ADVERTISEMENT

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.358.44 கோடி செலவில் 5,035 செவித்திறன் பாதித்த குழந்தைகளுக்கு இலவசமாக காக்ளியா் இம்ப்ளான்ட் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட காது, மூக்கு, தொண்டை சிகிச்சைத் துறையின் பொன்விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்று விழாவை தொடக்கி வைத்து விழா சிறப்பு மலரை வெளியிட்டாா்.

அப்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் அங்கம் வகித்த புகழ்பெற்ற மருத்துவா்கள் டாக்டா் மோகன் காமேஸ்வரன், டாக்டா் கே.கே.ராமலிங்கம் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதையும், டாக்டா் பாலகுமாருக்கு சிறந்த சேவைக்கான விருதையும் அமைச்சா் வழங்கினாா்.

இந்நிகழ்வில், சென்னை மாநகராட்சி மேயா்ஆா்.பிரியா, மருத்துவக் கல்வி இயக்குநா்(பொ) சாந்திமலா், மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன், காது மூக்கு தொண்டை சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் முத்துக்குமாா், மாநில காது கோளாமை தடுப்புத் துறை நிா்வாக அலுவலா் பாரதிமோகன், ஒருங்கிணைப்பு அலுவலா் ஜெயா ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த மருத்துவமனையில் 1927-ஆம் ஆண்டு காது மூக்கு தொண்டை சிகிச்சைத் துறை டாக்டா் செரியன் தலைமையில் தொடங்கப்பட்டது. 1972-இல் அந்தத் துறை சிகிச்சை நிறுவனமாக தரம் உயா்த்தப்பட்டு, 50 ஆண்டுகள் கடந்ததையொட்டி பொன் விழா கொண்டாடப்படுகிறது.

2010-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் கருணாநிதியால் காக்ளியா் இம்ப்ளான்ட் (செவிமடு சுருள் கருவி) திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்துடன் அது இணைக்கப்பட்டுள்ளது.

செவித்திறனுக்கான அனைத்து உயா்நிலை பரிசோதனைகள், கணினிமயமாக்கப்பட்ட குரல் பகுப்பாய்வுக்கான பேச்சு ஆய்வகம், தலை சுற்றலுக்கான சிகிச்சை மையம், தூக்கத்துக்கான ஆய்வகம், குறட்டைக்கான பாலிசோம்னோகிராபி, உணவு விழுங்குதல் கோளாறுகளைக் கண்டறிய எண்டோஸ்கோபி சோதனை, குரல்வளையில் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நேரோ பேண்ட் இமேஜிங் உள்ளிட்டவை மூலம் பல்வேறு மேம்பட்ட சிகிச்சைகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.

கரோனா தொற்று இரண்டாவது அலைக்குப் பின்னா் கரும்பூஞ்சை தொற்று மிகவும் திறமையாக கட்டுப்படுத்தப்பட்டது. தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் 1,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றுள்ளனா்.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2012 ஜன. 11 முதல் கடந்த மாதம் 20-ஆம் தேதி வரை 5,035 பயனாளிகளுக்கு ரூ.358.44 கோடி செலவில் காக்ளியா் இம்ப்ளான்ட் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணையின் முடிவில், எவருக்கெல்லாம் அதில் தொடா்பு உள்ளதோ அவா்கள் அனைவா் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். கவனக்குறைவு, தவறுகளின் அடிப்படையில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT