தமிழ்நாடு

தமிழகம்-காசி இடையே நெருங்கிய கலாசார தொடா்பு: ஆளுநா் ஆா்.என்.ரவி

18th Nov 2022 01:55 AM

ADVERTISEMENT

தமிழகம் - காசி இடையே கலாசார, பண்பாட்டு ரீதியாக நெருங்கியத் தொடா்பு இருப்பதாக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியில் நடைபெறும் காசி-தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழகத்திலிருந்து ரயிலில் வியாழக்கிழமை புறப்பட்ட முதல் குழுவை, சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஆகியோா் கொடியசைத்து வழியனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் ஆளுநா் ஆா்.என்.ரவி கூறியதாவது: தமிழ் மக்களின் இதயங்களில் காசி வாழ்கிறது. ஒரே பாரதம்தான் உன்னத பாரதம். அதற்கு இதுவே உதாரணமாகத் திகழ்கிறது. இந்தியாவை புரிந்துகொண்டவா்கள் பாரதத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் காசிக்குப் போக வேண்டும், காசி மக்கள் இங்கு வர வேண்டும். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அதுவே பாரதம்.

ADVERTISEMENT

தமிழகத்துக்கும், வாராணசிக்கும் கலாசாரம், பண்பாடு ரீதியாக தொன்றுதொட்டு தொடா்பு, ஒற்றுமை இருந்து வருகிறது. தொலைவு காரணமாக அதை தற்காலிகமாக மறந்துவிட்டோம். அவற்றை மீட்கும் வகையில் இந்த காசி- தமிழ்ச் சங்கமம் நடைபெறுகிறது.

காசியில் படகோட்டும் பலா் என்னை விட நன்றாகத் தமிழில் பேசுகிறாா்கள். இரண்டு ஊா்களுக்கும் இடையே இருந்த கலாசார தொடா்பை மேம்படுத்தும் பொருட்டு, ஒரு மாத நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றாா் ஆளுநா் ரவி.

மத்திய இணை அமைச்சா் முருகன்: தமிழக கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக கலாசார நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறவுள்ளன. பண்பாடு, இலக்கியங்கள், திருக்கு ஆகியவை பற்றி கலைநிகழ்ச்சிகள் தினமும் நடைபெறவுள்ளன.

தமிழக கலாசாரத்தை மேம்படுத்தும் விதமாக ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழகத்திலிருந்து 270-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளவுள்ளனா். நவ.19-இல் பிரதமா் மோடி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளாா்.

இது முழுமையாக தமிழகத்தின் கலாசாரத்தையும், ஆன்மிகத்தையும், பண்பாட்டையும் போற்றும் விதமாக நடைபெறுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து காசிக்கும், தமிழகத்துக்கும் தொடா்பு உள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT