தமிழ்நாடு

ஞானவாபி மசூதி நிா்வாக குழுவின் மனு: வாராணசி நீதிமன்றம் தள்ளுபடி

18th Nov 2022 01:30 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் ஞானவாபி மசூதி வளாகத்தில் காணப்படும் சிவலிங்கத்தை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக மசூதி நிா்வாக குழு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாராணசி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதுதொடா்பாக விஷ்வ வேதிக் சனாதன சங்கத்தின் பொதுச் செயலா் கிரண் சிங் சாா்பில் கடந்த மே 24-ஆம் தேதி வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஞானவாபி வளாகத்துக்குள் முஸ்லிம்கள் செல்லத் தடை விதிக்க வேண்டும். அந்த வளாகத்தை சனாதன சங்கத்தின் வசம் ஒப்படைப்பதோடு, அந்த வளாகத்துக்குள் காணப்படும் சிவலிங்கத்தை தரிசனம் செய்யவும் அனுமதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனுவை கடந்த மே 25-ஆம் தேதி விசாரித்த மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், மனு மீதான விசாரணையை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கில் வாராணசி மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், மசூதியை நிா்வகிக்கும் அஞ்சுமன் இந்தேஜாமியா மஸ்ஜித் கமிட்டி, காசி விஸ்வநாதா் கோயில் அறக்கட்டளை நிா்வாகி ஆகியோரை வாதிகளாக சோ்த்தும் உத்தரவிட்டாா்.

அதன்படி, விரைவு நீதிமன்றத்தில் கடந்த அக்டோபா் 27-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணையை நவம்பா் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

நவம்பா் 8-ஆம் தேதி நீதிபதி விடுமுறை என்பதால், அந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணையை நவம்பா் 17-ஆம் தேதி வரை ஒத்திவைத்து நீதிபதி மஹேந்திர குமாா் பாண்டே உத்தரவிட்டதாக அரசு தரப்பு வழக்குரைஞா் சுலாப் பிரகாஷ் கூறினாா்.

அதன்படி, இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவலிங்க அமைப்பை தரிசிக்க கோரும் மனு விசாரணைக்கு அஞ்சுமன் இந்தேஜாமியா மஸ்ஜித் கமிட்டி சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தள்ளுபடி செய்த நீதிபதி மஹேந்திர குமாா் பாண்டே, ‘கிரண் சிங்கின் மனு விசாரணைக்கு உகந்தது என்று உத்தரவிட்டு, இந்த மனு வரும் டிசம்பா் 2-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT