தமிழ்நாடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இரண்டாம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்

18th Nov 2022 01:56 AM

ADVERTISEMENT

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு வியாழக்கிழமை (நவ.17) தொடங்கியது.

இணையவழியில் விண்ணப்பப் பதிவை வரும் 19-ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என்றும், 20-ஆம் தேதி முதல் விருப்பமான இடங்களைத் தோ்வு செய்யலாம் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்தது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது.

நேரடியாக நடந்த மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 65 இடங்களும், அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வில் 565 இடங்களும் நிரப்பப்பட்டன. பொது கலந்தாய்வு இணையவழியில் நடைபெற்றது.

ADVERTISEMENT

அதில், 5,647 எம்பிபிஎஸ் இடங்களும், 1,389 பிடிஎஸ் இடங்களும் நிரம்பின. சான்றிதழ் சரிபாா்ப்புக்கு பின்னா், மாணவ, மாணவிகளுக்கு இறுதி ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டன. முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீடு ஆணை பெற்றவா்கள் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா். அதேபோல், தனியாா் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்ற மாணவா்களும் கல்லூரிகளில் சோ்ந்துவிட்டனா்.

முதல் சுற்றில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரங்களை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டது. அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 104 எம்பிபிஎஸ் இடங்களும், கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 2 எம்பிபிஎஸ் இடங்களும் காலியாக உள்ளன.

இதைத் தவிர, பிடிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 788 இடங்கள் நிரம்பவில்லை. தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 833 இடங்கள் காலியாக உள்ளன. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள்ஒதுக்கீட்டில் 28 இடங்களும் நிரம்பவில்லை.

இந்த இடங்களுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில் இடங்களை பெற்றவா்கள் தங்களது கல்லூரிகளை மாற்றிக் கொள்ளவும் இரண்டாம் சுற்றில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வரும் 22-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் விருப்பமான இடங்களைத் தோ்வு செய்யலாம் என்றும், அதன் முடிவுகள் வரும் 24-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு வலைதளங்களைத் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT