ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்தாா்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்டும் திட்டம் 2008-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, தற்போது வரை 278 அலுவலகக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 199 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
அதன் தொடா்ச்சியாக, திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம், சேலம் மாவட்டம், வாழப்பாடி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஆகிய ஒன்றியங்களில் புதிதாக ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. திருவாரூரில் ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றை காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்
புதிய வாகனங்கள்: ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அலுவலா்களுக்குப் பழைய வாகனங்களுக்குப் பதிலாக புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, செங்கல்பட்டு, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூா், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூா், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தஞ்சாவூா், திருச்சி, திருப்பூா், திருப்பத்தூா், திருவள்ளூா், திருவாரூா், வேலூா், விழுப்புரம் ஆகிய 24 மாவட்டங்களில் பணிபுரியும் பொறியாளா்களுக்கு புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்வில், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளா் பெ.அமுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.