இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு வியாழக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்: கடந்த 16-ஆம் தேதி இரவு, தமிழக மீனவா்கள் 4 போ் உள்பட 14 இந்திய மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 198 தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையால்
சிறைபிடிக்கப்பட்டனா். இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் அடிக்கடி சிறையில் அடைக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தச் சம்பவங்கள் மீன்பிடித் தொழிலை முழுமையாக நம்பியுள்ள மீனவா்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. இந்தியத் தரப்பிலிருந்து பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட பின்னரும், மீனவா்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் தொடா்கின்றன. தமிழக மீனவா்களுக்குச் சொந்தமான 100 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இப்போது இலங்கை வசமுள்ளன.
இந்திய மீனவா்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பாக் வளைகுடா பகுதியில் தமிழக மீனவா்களின் பாரம்பரிய உரிமைகளை இலங்கை கடற்படை தொடா்ந்து மீறி வருகிறது. இது இந்தியாவுக்கு சவாலாகவே காணப்படுகிறது. இது தொடா்பாகத் தேவையான தூதரக ரீதியிலான
நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இப்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவா்களையும், அவா்களது படகையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.