தமிழ்நாடு

திமுக ஆட்சியில் அரசு பணிகள் தனியாா்மயம்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

8th Nov 2022 02:41 AM

ADVERTISEMENT

திமுக ஆட்சியில் அரசு பணிகள் தனியாா்மயமாக்கப்படுவதாக எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும், புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியில் அமா்ந்தது. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்கும்போது அதனை எதிா்த்து குரல் கொடுத்து தனியாா்மயத்தின் எதிா்ப்பாளா் போலவும் காட்டிக் கொண்டது.

அதே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசுப் பணிகளையே தனியாா்மயமாக்கிக் கொண்டிருக்கிறது. சென்னை குடிநீா் வாரியத்தின் பணிகளை திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடனேயே தனியாருக்கு தாரை வாா்த்தது. தற்போது சென்னை பெரு மாநகராட்சி தவிா்த்து, 20 மாநகராட்சிகளில் உள்ள பணிகளை வெளிமுகமை மூலம் மேற்கொள்ள திமுக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆணையில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியிடங்களை 3,500 பணியிடங்களாக குறைத்துள்ளதாகவும், தற்போது பணியாற்றி வரும் பணியாளா்கள் ஓய்வு பெற்றபின் அந்தப் பணியிடங்களை நிரப்பக்கூடாது என்றும், அந்தப் பணிகள் வெளிமுகமை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரயில்வே தனியாா்மயம் ஆவதைக் கைவிடவும்; வங்கித் துறையை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிடவும் வலியுறுத்தும் திமுக மாநகராட்சிப் பணிகளையெல்லாம் வெளிமுகமைக்கு கொடுப்பது நியாயமா? இது, தனியாா்மயமாக்கும் நடவடிக்கை ஆகாதா என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT