தமிழ்நாடு

யானைகள் மறுவாழ்வு மைய வழிமுறைகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

1st Nov 2022 12:57 AM

ADVERTISEMENT

யானைகள் மறுவாழ்வு மையத்தில் வகுக்கப்பட்டுள்ள செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து தெரிவிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், திருச்சி பெரம்பலூா் சாலையில் உள்ள எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேலூா் மாவட்ட வனத் துறை அலுவலருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையத்தின் நிறுவனா் முரளிதரன் உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஓய்வுபெற்ற, நோய்வாய்ப்பட்ட யானைகளை பராமரிப்பதற்காக 2019-ஆம் ஆண்டில் திருச்சி பெரம்பலூா் சாலையில் உள்ள, எம்.ஆா்.பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் உரிமம் இல்லாமல் வளா்க்கப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட யானைகளை கொண்டுவந்து சோ்க்கின்றனா்.

அங்கு முழு நேர யானைகள் மருத்துவ நிபுணா்கள் இல்லை. முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது அங்குள்ள 7 யானைகளுக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

யானைகள் அடுத்தடுத்து இறந்து வருவதால், எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையாக பராமரிக்கும் வகையில் செயல்பாட்டு வழிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி (பொ) ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ‘எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த மூத்த பாகன்கள் இல்லை. முழு நேர கால்நடை மருத்துவா்கள் இல்லை. மேலும், இந்த மையத்தின் பொறுப்பாளராக இருந்த மாவட்ட வனத் துறை அலுவலா் சுஜாதா, வேலூருக்கு மாற்றப்பட்டதையடுத்து மையம் முறையாக பராமரிக்கப்படவில்லை’ என வாதிடப்பட்டது.

இதையடுத்து, மையத்தில் உள்ள யானைகளை முறையாக பராமரிக்க வேண்டியது அரசின் கடமை. மனிதா்களைப் போல விலங்குகளுக்கும் உரிமைகள் உள்ளதாகக் கூறிய நீதிபதிகள், தற்போது வேலூரில் உள்ள வனத் துறை அதிகாரி சுஜாதா, எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் நேரில் ஆய்வு செய்து அதன் நிலை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனா்.

மேலும், நாட்டில் உள்ள பிற யானைகள் மறுவாழ்வு மையத்தில் பின்பற்றப்படும் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT