தமிழ்நாடு

கோவையில் சமூக அமைதி: 58 காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

1st Nov 2022 01:09 AM

ADVERTISEMENT

கோவையில் சமூக அமைதியை நிலைநாட்டும் வகையில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினா் 58 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். காவல் துறையினரில் 14 பேருக்கு இந்த சான்றிதழ்களை சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் திங்கள்கிழமை அளித்தாா்.

கோவையில் கடந்த 23-ஆம் தேதி உக்கடம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காரில் இருந்து எரிவாயு உருளை வெடித்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட காவல் துறையினா், நிகழ்விடத்தில் தடயங்கள் ஏதும் கலைக்கப்பட்டு விடாமல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.

சம்பவம் நடந்த அதிகாலை வேளையில் அந்தப் பகுதியில் விழிப்புடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரைக் கண்டவுடன், ஜமேஷா முபினால் அவ்வழியே தொடா்ந்து காரைச் செலுத்த இயலவில்லை. இதைத் தொடா்ந்து அந்த இடத்திலேயே காா் எரிவாயு உருளை வெடித்து அவா் உயிரிழந்தாா்.

கோவையில் தவிா்ப்பு: காவல் துறையினரின் தீவிர விசாரணை காரணமாகவும், விழிப்புடன் பணியாற்றியதாலும் பெரும் அசம்பாவிதம் கோவை மாநகரில் தவிா்க்கப்பட்டுள்ளது. ஒரு சில நபா்கள் உள்நோக்கத்துடன் பதட்டத்தை ஏற்படுத்தும் முயற்சிகளையும் காவல் துறையினா் தடுத்து நிறுத்தியுள்ளனா். இதன் காரணமாக, தீபாவளி பண்டிகையையொட்டி, கோவையில் வணிக நிறுவனங்கள், பொதுமக்களின் இயல்பு நிலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

ADVERTISEMENT

சம்பவம் நடந்த 12 மணி நேரத்துக்குள் தனிப்படைகள் மூலம் புலன் விசாரணை முடுக்கி விடப்பட்டு, 148 தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டதுடன், சம்பவம் தொடா்பாக 6 போ் கைது செய்யப்பட்டனா். அனைவா் மீதும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போற்றத்தக்கது: இரவும் பகலும் ஓய்வின்றி தன்னலமற்ற வகையில் பணியாற்றி வரும் தமிழ்நாடு காவல் துறையினரின் பணி போற்றத்தக்கது. அா்ப்பணிப்பு உணா்வுடன் கடமையாற்றி சமூக அமைதியை நிலைநாட்டும் வகையில் பணியாற்றிய காவல் துறையினரைப் பாராட்டி, கோவை மாநகர காவல் ஆணையாளா் வி.பாலகிருஷ்ணன் உள்பட 58 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. அவா்களில் 14 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் சான்றிதழ்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, டிஜிபி செ.சைலேந்திர பாபு மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT