தமிழ்நாடு

கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம்: சென்னை உயா்நீதிமன்றம்

1st Nov 2022 01:14 AM

ADVERTISEMENT

கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் என தெரிவித்த சென்னை உயா் நீதிமன்றம், நன்கொடைகளுக்கு வரி விதித்த உத்தரவு சரியென தீா்ப்பளித்தது.

சென்னை வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவா்களிடமிருந்து அறக்கட்டளையின் பெயரில் வசூலித்த நன்கொடைகளுக்கு வருமானவரித் துறை மதிப்பீட்டு அதிகாரி வரிவிதித்து உத்தரவிட்டாா். இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயம், அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரி வசூலிக்க முடியாது எனக் கூறி, மதிப்பீட்டு அதிகாரி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளை எதிா்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்வி நிறுவனங்கள் மாணவா்களிடம் நன்கொடை வசூலிக்கத் தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்ட விதிகளை மீறி, நன்கொடை வசூலித்ததுடன், அதற்கு வரிவிலக்கு பெறவும் முயற்சித்துள்ளதாகக் கண்டனம் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இத்தொகைகள் நன்கொடையே என ஆதாரங்கள் மூலம் மதிப்பீட்டு அதிகாரி நிரூபித்துள்ளதாகக் கூறி, தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதிகள், கல்வி நிறுவனங்களிடமிருந்து நன்கொடை தொகைக்கான, வருமான வரியை கணக்கிட்டு வசூலிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரியது குற்றம் என்பதால், முந்தைய மதிப்பீட்டு ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக்கணக்குகளை, மதிப்பீட்டு அதிகாரி, ஆதாரங்கள் மற்றும் சட்டத்துக்கு உட்பட்டு மறு ஆய்வு செய்ய வேண்டும்.

இணையதளத்தை உருவாக்க... மேலும், நன்கொடை இல்லாமல் மாணவா்களுக்கு சோ்க்கை வழங்குவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். நன்கொடை வசூலை தடுக்கும் வகையில் பொது மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இணையதளத்தை உருவாக்கி, எந்தெந்த கல்லூரிகள் நன்கொடை வசூலிக்கின்றன என்பதை மாணவா்களுக்கும் பெற்றோா்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

அந்த இணையதளம் தேசிய தகவல் மையத்தால் நிா்வகிக்கப்பட வேண்டும். அந்த விவரங்களை மாணவா் சோ்க்கையின்போது மாநில அரசுகள் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், ஒவ்வொரு மாநிலமும் கல்வி உரிமைக்காக சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. அதன்படி, மாநில அரசுகள் கல்வி வழங்காததால், பெற்றோா்கள் அரசு பள்ளிகளை விட்டுவிட்டு தனியாா் பள்ளிகளை நாடுகின்றனா் என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனா். கல்வி போதித்தல் என்பது ஒரு புனிதமான சேவை. கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT