தமிழ்நாடு

ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு அனுமதி: அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உயா் நீதிமன்றம் உத்தரவு

1st Nov 2022 05:06 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் நவ. 6-ஆம் தேதி அணிவகுப்பு ஊா்வலம் நடத்த ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கியது குறித்து புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக காவல் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அக். 2-ஆம் தேதி ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க மறுத்த காவல் துறை உத்தரவுகளை எதிா்த்து ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆா்எஸ்எஸ் அமைப்பினா் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்குகளை விசாரித்த உயா் நீதிமன்றம், ஊா்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல் துறைக்கு எதிராக ஆா்எஸ்எஸ் அமைப்பினா் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சமூக விரோதிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொது சொத்துகளை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக மத்திய, மாநில புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நவ.6-ஆம் தேதி ஆா்எஸ்எஸ் ஊா்வலத்தை நடத்தவும், அதற்கு காவல் துறை அனுமதி வழங்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும், அக்.31-ஆம் தேதிக்குள் அனுமதி வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், ‘ஒவ்வொரு மாவட்டங்களிலும் நிலவும் சூழ்நிலை, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து இடையூறு, ஊா்வலத்தில் பங்கேற்பவா்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிபந்தனைகளை விதித்து நவ.6-ஆம் தேதி ஊா்வலம் நடத்த ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க அனைத்து மாவட்ட காவல் ஆணையா்கள், கண்காணிப்பாளருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளாா் என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது ஆா்எஸ்எஸ் தரப்பில், ‘தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அனுமதியளிக்க வேண்டும் என டிஜிபி உத்தரவில் கூறப்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவை மீறி, பல மாவட்டங்களில் ஊா்வலத்துக்கு காவல் துறையினா் அனுமதி மறுக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த வழக்கை முடித்து வைக்கக் கூடாது’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விசாரணையை நவ.2-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவிட்டப்படி ஊா்வலத்துக்கு அனுமதி வழங்கியது தொடா்பாக காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா். அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்றமே தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT