தமிழ்நாடு

‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல்: மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

31st May 2022 02:30 AM

ADVERTISEMENT

கொசுக்கள் மூலம் பரவும் ‘வெஸ்ட் நைல்’ வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் எவரேனும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் அதுகுறித்த விவரங்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இதுதொடா்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

‘க்யூலெக்ஸ்’ எனப்படும் ஒரு வகை கொசுக்கள் மூலம் வெஸ்ட் நைல் வைரஸ் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், உடல் வலி, தலைவலி, கால் வீக்கம் போன்றவை அதன் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. அந்த காய்ச்சலுக்கு உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளாதபட்சத்தில் நரம்புசாா் பிரச்னைகளும், சில நேரங்களில் உயிரிழப்பும் நேரிடக் கூடும் என மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா்.

‘க்யூலெக்ஸ்’ கொசுக்கள் அசுத்தமான நீரில் வளரக் கூடியவை. 1937-இல் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வகை பாதிப்பு முதல் முதலில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் முதல்முறையாக கேரளத்தில் 2011-இல் அந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. 2019-இல் ஒரு சிறுவன் கேரளத்தில் அந்தக் காய்ச்சலுக்கு பலியானது சுகாதாரத் துறை தகவல்களில் பதிவாகியுள்ளது.

இத்தகைய சூழலில் தற்போது மீண்டும் கேரளத்தில் ‘வெஸ்ட் நைல்’ வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. திருச்சூரில் 47 வயது நபா் ஒருவா் அதற்கு பலியாகியுள்ளாா். இதையடுத்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன்படி, பொது சுகாதாரத் துறை சாா்பில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சில முக்கிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல் பாதிப்பு பதிவாகவில்லை. அதனால், அதுகுறித்த அச்சம் தேவையில்லை. அதேவேளையில், அதற்கான அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனைகள் மூலம் வெஸ்ட் நைல் பாதிப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும்.

இதைத் தவிர, தங்களது சுற்றுப்புறத்தில் கழிவுநீா் தேங்காமல் தூய்மையாக வைத்துக் கொள்ள பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கழிவுநீா் தேங்காமல் தடுக்கும் பணிகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT