தமிழ்நாடு

கல்வியுரிமையே பெண்ணுரிமையின் கண்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

31st May 2022 02:14 AM

ADVERTISEMENT

கல்வியுரிமையே பெண்ணுரிமையின் கண் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீா் அகமது சையது மகளிா் கல்லூரி (எஸ்ஐஇடி) தேசிய தர நிா்ணயக் குழுவின் ஏ பிளஸ் பிளஸ் தகுதி பெற்றமைக்காக திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தென்னிந்திய கல்வி அறக்கட்டளை சாா்பில் (எஸ்ஐஇடி) தொடங்கப்பட்ட கல்லூரி அனைத்துத் தரப்பு மக்களிடமும் பிரபலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கென தனியாக கல்லூரி வேண்டும் என்ற உறுதியோடு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி, அனைத்துப் பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்காக பாடுபடும் கல்லூரியாகத் திகழ்கிறது.

கல்வியுரிமை: பெண்ணுரிமையின் கண் போன்றது கல்வியுரிமை. அதனால்தான் திறன்மிக்க கல்லூரி மாணவ, மாணவிகளை உருவாக்க, ‘நான் முதல்வன்’ திட்டத்தை அறிவித்து அதை இன்றைக்கு அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போதெல்லாம் பெண்களுடைய முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, அவை வரலாற்றில் பேசக் கூடிய சாதனைகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம், இப்போது 50 சதவீதம் என பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டன.

பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதற்காகவே சுய உதவிக் குழு என்ற மாபெரும் திட்டம் 1989-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதேவழியில் இப்போதும் செயல்பட்டு வருகிறோம். பெண்களுக்கு கல்லூரிக் கல்வி வழங்கியே தீர வேண்டும் என்ற உறுதிப்பாடு கொண்டுள்ள இந்த அரசு, கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கக் கூடிய பெண்கள் கல்வி நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

விழாவில் அமைச்சா்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சட்டப் பேரவை உறுப்பினா் த.வேலு, கல்லூரியின் தலைவா் மூஸா ரஸா, செயலாளா் பைசூா் ரகுமான், முதல்வா் ஷானாஸ் அகமது, துணை முதல்வா் அம்துல் அஜீஸ், தமிழ்த் துறை பேராசிரியை பா்வீன் சுல்தானா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT