தமிழ்நாடு

மானாமதுரை அருகே பெரும்பச்சேரியில் ஜல்லிக்கட்டு: 20 வீரர்கள் காயம்

28th May 2022 11:27 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் பெரும்பச்சேரி கிராமத்தில் கோயில் விழாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நூற்றுக்கணக்கான காளைகள் சீறிப் பாய்ந்தன. மாடுகளை பிடித்த வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாடுகள் முட்டியதில் 20 வீரர்கள் காயமடைந்தனர்.

பெரும்பச்சேரி சமயணசாமி கோயில் களரி விழாவை முன்னிட்டு கோயில் அருகே ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்க மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து  500க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.

வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு பின்னர் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்கள் அணி அணியாக வந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். பல காளைகள் பிடிக்க வந்த வீரர்களை முட்டி தூக்கி வீசின. ஜல்லிக்கட்டைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இதில், காளைகளைப் பிடிக்க முயன்று 20 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். 

மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், ஸ்டவ் அடுப்பு, சில்வர் அண்டா, வாளி,சேர்,ரொக்கப்பணம், தங்கக்காசு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் சிறப்பாக களமாடிய காளைகளுக்கும்  அதன் உரிமையாளர்களுக்கும் சிறந்த மாடுபிடி காளையர்களுக்கும்  கூடுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை பெரும்பச்சேரி ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் செய்திருந்தனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT