தமிழ்நாடு

கோவை மதுக்கரையில் கார் மீது வேன் மோதி விபத்து: சிறுவன் பலி

27th May 2022 12:21 PM

ADVERTISEMENT

கோவையில் பேரக் குழந்தைகளுடன் கேரள மாநிலம், மலம்புழா அணைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும்போது, கார் மீது பின்பக்கமாக ஈச்சர் வேன் மோதியதில் சிறுவன் பலியானான். மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை வீரபாண்டி அடுத்த பிரஸ் காலனியைச் சேர்ந்தவர் அமல் சிமோன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை செல்வராஜ் (65) தனது பேரக் குழந்தைகளான, நித்தின் ஆபிரகாம் (12), கல்வின் கார்ல்சன் (9), யுவன் கிரிசின் (4) ஆகிய மூன்று பேருடன் கோடை விடுமுறையை கொண்டாட கேரள மாநிலத்தில் உள்ள மலம்புழா அணைக்கு இன்று காலை சென்றுள்ளார்.

பின்னர், மாலை மீண்டும் கோவைக்கு காரில் திரும்பியுள்ளனர். அப்போது, சேலம் - கொச்சி சாலை மதுக்கரை பாலத்துறை சந்திப்பு அருகே வந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த ஈச்சர் வாகனம் செல்வராஜ் வந்த கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே கேரள நோக்கிச் சென்ற டிப்பர் லாரி மீது மோதி நின்றது. இதில், காரில் இருந்த நான்கு பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமல் சிமோன் மகன் யுவான் கிரிசின் (4) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற ஈச்சர் வேன் ஓட்டுநர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT