தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே சரக்கு லாரியில் தீ விபத்து: ரூ.1 கோடி பொருள்கள் எரிந்து நாசம்

26th May 2022 11:51 AM

ADVERTISEMENT

 

திருவள்ளூர் அருகே கன்டெய்னர் சரக்கு லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமான சம்பவம் தொடர்பாக மணவாளநகர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே போலிவாக்கம் பகுதியில் தனியார் ஆன்லைன் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆர்டர் செய்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருள்களை கண்டெய்னர் சரக்கு லாரியில் ஏற்றிக் கொண்டு போலிவாக்கத்திலிருந்து சாலை மார்க்கமாக புதுதில்லி நோக்கி வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. 

இந்த நிலையில் திருவள்ளூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெங்கத்தூர் அருகே சென்ற போது கண்டெயினர் லாரியிலிருந்து புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஓட்டுநர் லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு காவல்துறை, தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் துணைக் கண்காணிப்பாளர் சந்திரதாசன், காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் மணவாளநகர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்றனர். லாரியை திறந்து பார்த்தபோது உள்ளே தீப்பற்றி மளமளவென எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து திருவூர் மற்றும் திருவள்ளூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ADVERTISEMENT

இந்த தீ விபத்தினால் கண்டெய்னர் சரக்கு லாரியில் இருந்த ஆர்டர் செய்த ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமான சம்பவம் தொடர்பாக மணவாளநகர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த வீட்டு உபயோக பொருள்கள் கொண்டுசெல்லும் போது கண்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT