தமிழ்நாடு

முடிவுற்ற 5 திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

26th May 2022 06:57 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றாக பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்து வருகிறார்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர்.

மத்திய அரசின் சார்பில் நிறைவேற்றி முடிக்கப்பட்ட 5 திட்டங்களை ஒவ்வொன்றாக பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். அதன்படி, 

75 கி.மீ. தொலைவுள்ள ரூ.500  கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை-தேனி இடையேயான அகல ரயில் பாதை திட்டத்தை தொடக்கி வைத்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க.. இதுதான் திராவிட மாடல்: பிரதமர் மோடிக்கு விளக்கிய முதல்வர் ஸ்டாலின்

இந்த ரயில் பாதையில் இயக்கப்படும் முதல் ரயிலை, பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தொலைவுக்கு ரூ.590 கோடி மதிப்பில் மூன்றாவது ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  இதன்மூலம் புறநகர் ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு, பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படும்.

 

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி பயனாளர்களிடம் ஒப்படைத்தார். 

மேலும், ரூ. 850 கோடி மற்றும் ரூ. 910 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 115 கி.மீ. நீளமுள்ள எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவு மற்றும் 271 கி.மீ. நீளமுள்ள திருவள்ளூர்-பெங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டங்களை பிரதமர் தொடக்கி வைத்தார்.

இந்தத் திட்டங்கள், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் உள்ள நுகர்வோருக்கும், தொழிற்சாலைகளுக்கும் இயற்கை எரிவாயு விநியோகத்தை எளிதாக்கும்.

மேலும் சென்னை துறைமுகம் - மதுரவாயல் வரை கட்டப்படும் உயர்மட்ட விரைவுப்பாதை உள்ளிட்ட 11 திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்குத் தொடங்கிய விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. மத்திய இணையமைச்சர் எல். முருகன், தொடக்க உரையாற்றினார். தமிழக மக்கள் சார்பாக பிரதமர் மோடியை வரவேற்பதாக அவர் கூறினார்.

விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலை உரையாற்றி வருகிறார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் முதல் அரசு விழா இது என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மேலும், மத்திய இணையமைச்சர் எல். முருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதன்மைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்றனர். 

நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வந்து கொண்டிருந்தபோது, பாஜக தொண்டர்கள் அதிகம் கூடியிருந்த பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வாகனம் வந்த போது, காரை நிறுத்தி, காரின் கதவை திறந்து கையசைத்து வரவேற்பினை ஏற்றுக் கொண்டார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT