தமிழ்நாடு

சென்னையில் கால்பந்து திடலிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

26th May 2022 12:37 PM

ADVERTISEMENT

சென்னையில் ரூ. 2.83 கோடி மதிப்பில் செயற்கை புல் கால்பந்து திடல் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, சென்னையைச் சிங்காரச் சென்னையாக உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிவடைந்தது. விரிவாக்கப்பட்ட பகுதிகளில் “சிங்காரச் சென்னை 2.0” திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சுற்றுச்சூழல், கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இத்திட்டத்தின் நோக்கம் நகரத்தை மறுவடிவமைத்து, வாழும் தரம் மற்றும் நீடித்த நிலைப்புத் தன்மையை மேம்படுத்தி உலகின் சிறந்த நகரங்களுக்கு இணையாக மாற்றுவதே ஆகும்.

இதையும் படிக்க | ‘சம்பாதிப்பதை சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் போட விரும்புகிறேன்’: கமல்ஹாசன்

ADVERTISEMENT

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.5.2022) சென்னை, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் “சிங்காரச் சென்னை 2.0” திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 86 இலட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் செயற்கை புல் கால்பந்து மைதானம், ரூபாய் 30 இலட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர், ரூபாய் 7 இலட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபாதை, ரூபாய் 24 இலட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் பார்வையாளர் மாடம் மற்றும் குடிநீர் வசதி, கழிவறை வசதி, கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி மேற்கொள்ளுதல் என மொத்தம் ரூபாய் 2 கோடியே 83 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, துணை மேயர்மு.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT