தமிழ்நாடு

மதுரை ஆவினில் பணி நியமன முறைகேடு: நேரில் ஆஜராக 30 பேருக்கு சம்மன்

26th May 2022 12:44 PM

ADVERTISEMENT

மதுரை ஆவினில் நடந்த பணி நியமன முறைகேடு குறித்து ஆவின் லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. ஜெயலட்சுமி தலைமையில் இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்றது. இதில் 30 நியமனங்களில் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

முதலில் 2020, 2021 ஆம் ஆண்டில் மேலாளர், எக்சிகியூட்டிவ் உள்பட 61 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நேர்காணல் மூலம் நியமனம் நடைபெற்றது. இதில் தகுதி இல்லாதவர்களுக்கு பணி வழங்கியது, எழுத்துத் தேர்வு வினாத்தாளை லீக் செய்தது, காசோலை மோசடி, தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான குழு 2 முறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.

மேலும், கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 81ன் படி ஆவின் துணை பதிவாளர் கணேசன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் எஸ்பி தலைமையில் இரண்டு நாட்களாக விசாரணை தொடர்ந்தது. அதில் சில ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து  துணை பதிவாளர் கணேசன் 2020, 2021ல் மதுரையில் பணி நியமனம் செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளார். பணி நியமனம், கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தமிழக கால்நடை மற்றும் பால்வளத் துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் ஜவகர் மதுரையில் முகாமிட்டு ஆவின் லஞ்ச ஒழிப்பு விசாரணை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT