தமிழ்நாடு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: 4 சுவையுடைய அதிசய மாமரம் காய்க்கத் தொடங்கியது

25th May 2022 10:15 AM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய அதிசய மாமரத்தில் தற்போது 4 சுவையுடன் மாங்காய்கள் காய்க்கத் தொடங்கி உள்ளது.

உலக பிரசித்தி பெற்ற, பஞ்ச பூத ஸ்தலங்களில் முதன்மையான மண் ஸ்தலமாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் விளங்குகிறது. கோயில் கருவறையில் உள்ள சுவாமி மணல் லிங்கமாக காட்சியளிக்கிறார். 

தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் மனமுறுகி சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

ADVERTISEMENT

ஒவ்வொரு கோயிலுக்கும் ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டும். அந்த வகையில், பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஸ்தவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் ஒன்று கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில்  உள்ளது. இம்மாமரம் 4 வேதங்களையும் நான்கு கிளைகளாக கொண்ட இத்தெய்வீக மாமரம். வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாக்கும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜூர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன.  அதாவது, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. 

இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். 

அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இன்றும் இங்கு பல திருமண ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்று வருகிறது.

மக்கள்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை சாப்பிட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 

தற்போது, இம்மாமரத்தில் 4 சுவையுடன் மாங்காய்கள் காய்க்கத் தொடங்கி உள்ளது. இந்த அதிசய மாமரத்தினை உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பார்த்து வியந்து செல்கின்றனர்.

இதையும் படிக்க: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

ADVERTISEMENT
ADVERTISEMENT