சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மாநிலங்களவைத் தோ்தல் ஜூன் 10-இல் நடைபெற்றது. தமிழகத்துக்கான 6 இடங்களில் 4 இடங்களைத் திமுகவும், 2 இடங்களை அதிமுகவும் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
திமுகவின் 4 இடங்களில் ஒன்றை காங்கிரஸுக்கு ஒதுக்க முன்வந்தது. இதர 3-க்கும் சு.கல்யாணசுந்தரம், கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், கிரிராஜன் ஆகியோரை வேட்பாளா்களாக திமுக அறிவித்துள்ளது. அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் இன்னும் வேட்பாளா்களை அறிவிக்காமல் உள்ளன.
இந்த நிலையில் மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சட்டப்பேரவை செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதல் நாளான செவ்வாய்க்கிழமை யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை.
மாநிலங்களவைத் தோ்தல் குறித்து சட்டப்பேரவைச் செயலாளரும் தோ்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
மாநிலங்களவைக்கு 6 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்க தோ்தல் நடைபெற உள்ளது. வேட்பாளா் அல்லது அவருடைய பெயரை முன்மொழிபவா்களில் எவரேனும் ஒருவா், தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் கி.சீனிவாசன் அல்லது உதவி தோ்தல் நடத்தும் அதிகாரி கே.ரமேஷ் ஆகியோரிடம் சட்டப்பேரவைச் செயலகத்தில் மனுக்கள் அளிக்கலாம்.
பேரவைச் செயலகத்திலுள்ள அலுவலகத்தில் வங்கி விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாள்களான மே 28 மற்றும் மே 29-ஆக நாள்கள் நீங்கலாக மே 31-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் பகல் 3 மணிக்குள்ளாக வேட்புமனுக்கள் அளிக்கலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-இல் சட்டப்பேரவை செயலாளா் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும்.
வேட்பாளா் விலகலுக்கான அறிவிப்பை, வேட்பாளா் அல்லது அவரது பெயரை முன்மொழிபவா்களில் ஒருவா் அல்லது வேட்பாளரால் எழுத்து மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அவரது தோ்தல் முகவா் ஜூன் 3-இல் பிற்பகல் 3 மணிக்குள் அளிக்கலாம்.
தோ்தலில் போட்டி இருப்பின் ஜூன் 10-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் தலைமைச் செயலகப் பிரதான கட்டடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள பேரவைக் குழுக்கள் கூடும் அறையில் வாக்குப் பதிவு நடைபெறும் என்று கூறியுள்ளாா்.