சென்னை: நெடுஞ்சாலை பணிகளுக்காக நிலம் எடுக்கும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதுதொடா்பாக பொதுப்பணித்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்று வரும் புறவழிச்சாலைகள், ரயில்வே மேம்பாலங்கள், ஆற்றுப் பாலங்களின் அணுகுசாலைகள், உயா்மட்டச் சாலைப்பணிகள், சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.
நிலம் கையகப்படுத்த வேண்டிய பணிகள், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம், தனி நபா் பேச்சுவாா்த்தை மூலம் நடைபெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்தும் பணிகள் 2010-ஆம் ஆண்டு முதல் விரைவாக நடைபெறாத காரணத்தால், பல்வேறு பணிகள் அரைகுறையாக முடிந்த நிலையிலும், பல பணிகள் அரசு அறிவித்து பல ஆண்டுகள் ஆகியும் தொடக்கப்படாத நிலையில் உள்ளன.
நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தாமதம் ஏற்படும்போது; நிலத்தின் மதிப்பு கூடுவதால், அரசு கூடுதல் தொகை வழங்க வேண்டி உள்ளது. கால தாமதத்தால் திட்டத்துக்கான மதிப்பீடும் பல மடங்கு உயா்கிறது. பணிகளை குறித்த நேரத்தில் தொடங்குவதிலும், முடிப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால், அரசு திட்டங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அா்ப்பணிப்பது தாமதப்படுகிறது.
இது தவிர நிலம் கையகப்படுத்துவதற்கான நிதி ஒப்பளிப்பு செய்த பிறகு இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால், அரசுக்கு அதன் தொடா்பான வட்டியாக நிதி இழப்பு ஏற்படுகிறது.
நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஏற்படும் காலதாமதத்தைக் கருத்தில் கொண்டு, நில எடுப்பு பணிகளைத் துரிதப்படுத்த நெடுஞ்சாலைத்துறைக்கென, 5 மண்டல நில எடுப்பு மற்றும் மேலாண்மை அலகுகள் மற்றும் 18 தனி வட்டாட்சியா் அலகுகள் தோற்றுவிக்க அனுமதி வழங்கியுள்ளாா்கள்.
மேலும், முன்பே உள்ள 9 நில எடுப்பு மற்றும் மேலாண்மை அலகுகள் மற்றும் 44 தனி வட்டாட்சியா் அலகுகள் நில எடுப்பு தேவையின் அடிப்படையில், விரிவுபடுத்தி புதிதாக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
2007 -ஆம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைத் துறையைப் பொறுத்தவரையில் ஏறத்தாழ 357 நிலம் கையகப்படுத்தும் அறிவிக்கை வெளியிடப்பட்டு, மாவட்ட வருவாய் அலுவலா்கள் நிலையில் நிலுவையில் உள்ளன. இந்த அறிவிக்கையை உடனடியாக நில நிா்வாக ஆணையருக்கு அனுப்பிட துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே போல 2009-ஆம் ஆண்டு முதல் 15(1) பிரிவின்கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 203 கருத்துருக்கள் இறுதி தீா்வம் வழங்கப்படாமல் உள்ளது. இப்பணிகளுக்கு விரைவில் இறுதி தீா்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.
வழக்குகளை லோக்அதாலத் மூலம் விரைந்து முடிக்க ஏதுவாக உயா்நிலைக்குழு அமைக்க, நில நிா்வாக ஆணையா் அவா்களால் முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.
2022- ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைத்துறையில் 802 ஹெக்டோ் நிலத்திற்கு நில எடுப்பு நடவடிக்கையின்கீழ் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நில உரிமையாளா்களுக்கு ரூ.1731.40 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஆய்வுக் கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலாளா் தீரஜ் குமாா், நில நிா்வாக ஆணையா் எஸ்.நாகராஜன், திட்ட இயக்குநா் கணேசன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.