தமிழ்நாடு

பொது இடங்களில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம்

22nd May 2022 12:09 AM

ADVERTISEMENT

தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளின் உபயோகத்தை தடுக்கும் வகையில், பேருந்து நிலையம், சந்தை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் துணிப் பை (மஞ்சப்பை) வழங்கும் இயந்திரங்களை நிறுவ சுற்றுச்சூழல் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் 14 வகை நெகிழிப் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மற்ற நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தடுத்தாலும், மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் நெகிழிப் பைகள் பயன்பாட்டைத் தடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை தமிழக அரசு அண்மையில் தொடங்கியது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணியில் சுற்றுச்சூழல் துறை ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களுக்கு எளிதாக துணிப் பைகள் கிடைக்கும் வகையில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் அதிகாரிகள் கூறியதாவது: பொது இடங்களில் மலிவு விலையில் துணிப் பைகள் கிடைப்பது சவாலாக உள்ளது. இதைப் போக்கும் வகையில் பேருந்து நிலையம், சந்தை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் துணிப்பை வழங்கும் இயந்திரம் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பைக்கு எவ்வளவு தொகை என்பது இறுதி செய்யப்பட்டு, விரைவில் இந்த இயந்திரங்கள் பொது இடங்களில் வைக்கப்படவுள்ளன. அந்தத் தொகையை இயந்திரத்தில் செலுத்தினால் ஒரு துணிப்பையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT