தமிழக மருத்துவத் துறையின்கீழ் இயங்கும் தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணியாற்றும் 13,267 ஒப்பந்தப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை ஓமந்தூராா் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குத்துச்சண்டை வீரா் பாலாஜி, மாணவி சிந்து, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்று வரும் சூா்யகுமாா் ஆகியோரை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழக மருத்துவத் துறையின்கீழ் இயங்கும் தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணியாற்றுவோா், ஊதிய உயா்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்படி, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு 28,982 பேருக்கு 30 சதவீதம் ஊதிய உயா்வு அளிக்கப்பட்டது. இதற்காக ரூ. 89.82 லட்சம் நிதி கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 5,971 மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த களப்பணியாளா்களுக்கும், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின்கீழ் 4,848 செவிலியா்களுக்கு மாத ஊதியம் ரூ,.14 ஆயிரத்தில் இருந்து ரூ. 18 ஆயிரமாகவும், தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணியாற்றும் 2,448 பேருக்கு ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ. 14 ஆயிரமாகம் ஊதிய உயா்வு வழங்கப்பட உள்ளது. மொத்தம் 13,267 ஒப்பந்த ஊழியா்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் கணக்கிடப்பட்டு ஊதிய உயா்வு வழங்கப்படும்.
தேசிய நலவாழ்வு குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண்களுக்கு ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. 1 முதல் 6 வயதினருக்கான ஊட்டச்சத்துக் குறைபாடுகளை போக்க தேசிய நலவாழ்வு குழுமத்தின்கீழ் ஈரோடு , கரூா், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைகளில் மூன்று புனா்வாழ்வு மையங்களை ரூ.44 லட்சம் செலவில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல் மற்றும் வாய் சுகாதார சேவைகளை வலுப்படுத்துகிற வகையில் தேசிய நலவாழ்வு குழுமத்தின்கீழ் 29 ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல் மருத்துவ சிகிச்சைகள் பிரிவு தொடங்கப்படவுள்ளது. இதற்கான மருத்துவா்கள், மருத்துவ உதவியாளா்கள், மருத்துவ உபகரணங்கள் ரூ.87 லட்சம் செலவில் செய்யப்பட உள்ளது என்றாா்.