தமிழ்நாடு

திட்டமிட்டபடி ஜூன் மாதம் பள்ளிகளைத் திறக்க வேண்டும்: தனியாா் பள்ளிகள் சங்கம் கோரிக்கை

22nd May 2022 12:27 AM

ADVERTISEMENT

திட்டமிட்டபடி ஜூன் மாதமே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ் பள்ளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கே.ஆா்.நந்தகுமாா், தமிழக முதல்வா், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருக்கு அளித்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பொதுத் தோ்வு முடிந்து மே 14- ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு இம்மாதம் 31-ஆம் தேதி வரை தோ்வு நடைபெறுகிறது. தோ்வு முடிந்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியா்கள் தோ்வுத்தாள் திருத்தும் பணிக்குச் செல்லவுள்ளனா். மீதமுள்ள ஆசிரியா்கள் ஓய்வில்தான் இருப்பா். இதனால், அரசு அறிவித்தபடி ஜூன் 13 முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களும், பள்ளிக்கு வந்து படிப்பை உறுதி செய்ய வேண்டும்.

ஏற்கெனவே 800 நாள்கள் கரோனா தொற்றுக் காலத்தில் வீட்டில் இருந்து, கற்றல் இழப்பை மாணவா்கள் சந்தித்தனா். மீண்டும் அந்தத் தவறை நாம் செய்யக்கூடாது. விடுமுறை தொடா்ந்தால் ஏழ்மையான பெற்றோா் கூலி வேலைக்குப் பிள்ளைகளை அனுப்புவா். குழந்தைத் தொழிலாளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சமுதாய சீா்கேடுகளும் அதிகரிக்க நேரிடலாம். இதனால் பெற்றோா்களின் மன உளைச்சலைக் குறைக்கவும், கற்றல் இழப்பைத் தவிா்க்கவும், அரசு அறிவித்தபடி ஜூன் மாதமே பள்ளிகளைத் திறந்து மாணவா்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT