தமிழ்நாடு

சென்னை பெருநகர குடிநீர் வாரிய தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்

DIN

சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

பல ஆண்டுகளாக தற்காலிகப் பணியாளர்களாக பணியாற்றிவரும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றக்கோரி கடந்த 6 நாள்களாக சென்னை எம்.ஆர்.சி. நகரில் முன்னெடுத்துவரும் அறவழிப்போராட்டத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று முழு ஆதரவு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் கடத்திவரும் திமுக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களுக்கு உயிர் காக்கும் நல்ல குடிநீர் வழங்குவதற்கான பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள், அடிப்படை உரிமைகள் கேட்டு வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியிருப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது.

குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தைச் சேர்ந்த தூய்மை தொழிலாளர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியும் இதுவரை பணி நிரந்தரம் செய்யாமலும், உரிய ஊதியம் வழங்காமலும் தமிழ்நாடு அரசு அவர்களின் உழைப்பை உறிஞ்சி, வஞ்சித்து வருவது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும். அதுமட்டுமின்றி, தற்போது அப்பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பைத் தனியாருக்குத் தாரைவார்த்ததன் மூலம், தூய்மைத் தொழிலாளர்களின் இத்தனை ஆண்டுகால அர்ப்பணிப்பு மிக்க உழைப்பினை விழலுக்கு இறைத்த நீராக எவ்வித பதில் பயனுமின்றி வீணடித்துள்ளது தமிழ்நாடு அரசு.

தங்களின் நியாயமான உரிமைகளை வழங்க வேண்டி, அங்குப் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், போராடும் ஊழியர்களைக் காவல்துறை மற்றும் குடிநீர் வாரிய நிர்வாகத்தின் மூலம் மிரட்டி அச்சுறுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இது முழுக்க முழுக்கத் தூய்மை தொழிலாளர்களுக்குத் திமுக அரசு செய்யும் துரோகமாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் தற்காலிக பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதோடு, அவர்களுக்கு உரிய ஊதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT