தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 40,000 கனஅடியாக அதிகரிப்பு: அதிகாரிகள் கண்காணிப்பு

20th May 2022 02:31 PM

ADVERTISEMENT

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து, வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலமாக காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 29,072 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை  வினாடிக்கு 29,964 கன அடியாகவும் பிற்பகலில் வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நேற்று காலை 11 1.10 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 112.77 அடியாகவும் பிற்பகலில் 113.50அடியாகவும் உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 83 டி.எம்.சி.யை தாண்டியது. பருவமழைக்கு முன்பாகவே நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலத்தில் கபினியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் நாளை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 46 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் காவேரி கரையோர மக்கள்பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்க வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் சுற்றறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு கீழ் பகுதியில் உள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

மேட்டூர் அணை நிரம்பி வருவதால் அணையின் இடது கரையில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறைக்கு கண்காணிப்பு அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திடீர் வெள்ளம் ஏற்பட்டால் அணையின் மதகுகளை இயக்க 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பொதுப்பணித்துறை பணியாளர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT