தமிழ்நாடு

விவசாயிகளைப் பார்த்ததும் காரை திருப்பிச் சென்றாரா காங்கயம் வட்டாட்சியர்?

20th May 2022 03:46 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: காங்கயம் வட்டாட்சியரிடம் உயர்மின் கோபுர இழப்பீடு தொடர்பாக முறையீடு செய்ய வந்த விவசாயிகளைப் பார்த்ததும் காரை திருப்பிக் கொண்டு வட்டாட்சியர் வெளியே சென்றதாகக் கூறி, விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-ராசிபாளையம் முதல் தருமபுரி மாவட்டம் பாலவாடி வரை விவசாய விளைநிலங்கள் வழியே உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

இதையும் படிக்க.. உதகை மலர்க்காட்சியில் என்ன ஸ்பெஷல்?

ADVERTISEMENT

மேலும் காங்கயம் அருகே உள்ள ராமபட்டினம் பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் பலர் டந்த மார்ச் 30 ஆம் தேதி, அப்பகுதியில் உள்ள உயர் மின் கோபுரம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர்மின் கோபுரத் திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மின்கோபுரம் அமையும் இடத்திற்கு 200 சதவீதம் இழப்பீடும், கம்பி செல்லும் இடத்திற்கு 100 சதவீத இழப்பீடும், திட்டப் பாதையில் உள்ள வீடு, கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் கட்டுமானங்களுக்கு பொதுப்பணித்துறையின் கணக்கீட்டின்படி இழப்பீடும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இருந்தனர்.

போராட்ட இடத்திற்கு வந்த காங்கயம் வட்டாட்சியர் இது குறித்து தாராபுரம் கோட்டாட்சியர் தலைமையில் முடிவு எடுக்கப்பட்டு, ஒரு வாரத்தில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிக்க.. புதிதாகத் திருமணமான மகன்-மருமகளைக் கொடூரமாகக் கொன்றவரின் மிகப்பெரிய சதி?

இதன் பின்னர் 50 நாள்கள் கடந்த பின்னரும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக வருவாய்த்துறையினர் எந்தவித  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணியளவில், காங்கயம் வட்டாட்சியரிடம் முறையீடு செய்வதற்காக, வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது வெளியில் சென்று விட்டு வந்த காங்கயம் வட்டாட்சியர் வாகனம் விவசாயிகளைப் பார்த்தும் வண்டியைத் திருப்பிக் கொண்டு, மீண்டும் வெளியில் சென்றதாகக் கூறப்படுகிறது, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலக வாசல் முன்பு உட்கார்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியபோது, உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக சட்டப்படியான உரிய இழப்பீடு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தோம். நாங்கள் உள்ளே வருவதைப் பார்த்துவிட்ட வட்டாட்சியர் அவரது வாகனத்தை திருப்பிக் கொண்டு, வெளியில் சென்று விட்டார். இதற்கு நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். 

உயர்மின் கோபுரத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வரை, வட்டாட்சியர் அலுவலக வாசலில் எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும், என்றார்.

 இது குறித்து காங்கயம் வட்டாட்சியர் ஆர்.ஜெகதீஸ்குமார் கூறியபோது, விவசாயிகளைப் பார்த்ததும் நான் காரைத் திருப்பிக் கொண்டு செல்லவில்லை. தாராபுரம் சென்று விட்டு அலுவலகத்திற்கு வந்தேன். காங்கயம்-பாப்பினி அருகே நீரேற்று உந்து நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்வதற்கு மடவிளாகம் பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் காத்திருந்தனர். அங்கு ஆய்வு செய்வதற்காக உடனே நான் கிளம்பிச் செல்ல வேண்டியதாகி விட்டது. விவசாயிகளைத் தவிர்ப்பதற்காக நான் வெளியில் சென்றதாகக் கூறுவது தவறு, என்றார்.

காங்கயம் வட்டாட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT