தமிழ்நாடு

வெலிங்டன் போர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

20th May 2022 10:14 PM

ADVERTISEMENT

வெலிங்டனில் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நீலகிரி மாவட்டம், வெலிங்டன், ராணுவ தலைமை பயிற்சிக் கல்லூரிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்திய இராணுவம், கடற்படை, விமானப் படைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளிலிருந்து வரும் ராணுவ அதிகாரிகளுக்கு உயர் ராணுவ கல்வி இக்கல்லூரியில் வழங்கப்படுகிறது. நாட்டின் முதன்மையான முப்படை சேவைகள் பயிற்சி நிறுவனங்களில், வெலிங்டனில் அமைந்துள்ள இக்கல்லூரி மிகவும் பழமையானது.
இந்திய பாதுகாப்பு துறையின் உயர் அலுவலர்கள் பயிற்சி பெறும் வெலிங்டன் ராணுவ தலைமை பயிற்சி கல்லூரிக்கு தமிழ்நாடு முதல்வர் வருவது இது இரண்டாவது முறையாகும். 50 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வராக இருந்த கருணாநிதி இக்கல்லூரிக்கு வருகை தந்திருக்கிறார். தற்போது முதல்வர் ஸ்டாலின் வருகை புரிந்துள்ளார்.
லெப்டினன்ட் ஜென்ரல் எஸ் மோகன் முதல்வருக்கு இப்பயிற்சி கல்லூரியின் ராணுவ உயர் அதிகாரிகளை அறிமுகப்படுத்தி, பயிற்சி நடவடிக்கைகள் மற்றும்
செயல்பாடுகள் குறித்தும், கடந்த 75 ஆண்டு காலமாக நீலகிரிக்கும் வெலிங்டன் ராணுவ தலைமை பயிற்சிக் கல்லூரிக்கும் இடையே உள்ள உறவு குறித்தும்
விளக்கினார்.

இதையும் படிக்க- மே 18: தமிழினப் படுகொலை நினைவு நாள்: கனடா அனுஷ்டிப்பு

இச்சந்திப்பின்போது, நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படைத் தலைமைத் பிபின் ராவத் மற்றும் 12 இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிகழ்வில், உடனடியாக நேரில் வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியதையும், தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கியதையும் நினைவுகூர்ந்து லெப்டினன்ட் ஜென்ரல் எஸ் மோகன் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், முதல்வர் பயிற்சி கல்லூரி இராணுவ உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
உலகப் புகழ்பெற்ற ராணுவ பயிற்சி மையமாகத் திகழும் இக்கல்லூரி தமிழகத்தில் அமைந்துள்ளது மிகவும் பெருமைக்குரியதாகும் என்று முதல்வர் தெரிவித்ததுடன், ராணுவ பயிற்சியில் அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பாராட்டினார். இக்கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகள் தொடர வேண்டும் என்றும், நாட்டிற்கு இக்கல்லூரி மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு இக்கல்லூரிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளித்திடும் என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT


அதனைத் தொடர்ந்து, முதல்வர் பயிற்சி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதி கையெழுத்திட்டார். இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சா.ப. அம்ரித், மேஜர் ஜென்ரல் ராஜேஷ் புரி, கடற்படை முதுநிலை பயிற்சியாளர் புர்வீர் தாஸ், ஏர்வைஸ் மார்ஷல் சஞ்ஜீவ் ராஜ் மற்றும் இராணுவ உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT