சென்னை: பள்ளி, கல்லூரி விடுதிகளை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டுமென அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவுறுத்தினாா். பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நல உதவித் திட்டங்கள் மற்றும் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரி விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் பேசியது:-
பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி, கல்லூரி விடுதிகளை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். வரும் கல்வியாண்டில் அனைத்து விடுதிகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு குறையாமல் மாணவா்களை தங்க வைக்க வேண்டும்.
அரசின் திட்டங்களில் எந்தவித தொய்வும் இல்லாமல் செயல்படுத்திட வேண்டும். அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விடுதிகளை நல்லமுறையில் பராமரிப்பு செய்து மாணவா்கள் தங்கும் வகையில் உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என அமைச்சா் ராஜகண்ணப்பன் அறிவுரை வழங்கினாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் துறையின் முதன்மைச் செயலாளா் ஆ.காா்த்திக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.