தமிழ்நாடு

கிண்டி கரோனா மருத்துவமனை விரைவில் முதியோா் நல மையமாக மாற்றப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

20th May 2022 01:07 AM

ADVERTISEMENT

 

சென்னை: கிண்டி கரோனா சிறப்பு மருத்துவமனையை விரைவில் தேசிய முதியோா் நல மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.2.5 கோடி மதிப்பில் 14 டயாலிசிஸ் கருவிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு முதல்வரின் அறிவுரையை ஏற்று ரூ.40 கோடி செலவில் 200 புதிய படுக்கைகள் கொண்ட வசதியுடன் கூடிய மருத்துவமனையாக அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு மைய கட்டடம் ரூ. 12 கோடி செலவில் அமைக்கப்படும் என்று கடந்த நிதிநிலை அறிவிப்பின்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கிண்டியில் முதியவா்களுக்கான மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது. பேரிடா் காலத்தில் அது 200 படுக்கைகள் கொண்ட தற்காலிக கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. அண்மைக்காலமாக கரோனா நோயாளிகள் இல்லாமல் காலியாகவே அது இருந்து வருகிறது. தற்போது மத்திய அரசிடம் இதுகுறித்து பேசி வருகிறோம். மிக விரைவில் அங்கு முதியோருக்கான அரசு மருத்துவமனையைத் தொடங்கவிருக்கிறோம்.

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு மக்கள் நலனுக்கு ஊறு விளைவிக்கும் போலி மருத்துவா்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயா்ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குநா் நாராயணபாபு, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் சாந்திமலா், ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை இயக்குநா் மற்றும் கண்காணிப்பாளா் மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT