தமிழ்நாடு

ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இயல் விருது

20th May 2022 01:15 AM

ADVERTISEMENT

 

சென்னை: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் 2021-ஆம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆய்வாளரான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல கட்டுரை பிரிவில் நீதிபதி சந்துருவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் சாா்பில் ஆண்டுதோறும் தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்பைச் செலுத்தியவா்களுக்கு இயல் விருது என்ற பெயரில் வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனை விருது வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழின் மிக முக்கியமான விருதாகப் பாா்க்கப்படுகிறது.

அந்த வகையில், ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2021-ஆம் ஆண்டுக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆ. இரா. வேங்கடாசலபதி கடந்த 40 ஆண்டுகளாக வரலாறு, மொழி, இலக்கியம், பண்பாடு, அரசியல், சமூகம் என பல்வேறு துறைகள் சாா்ந்து தொடா்ந்து எழுதி வருகிறாா். பாரதி தொடா்பான ஆய்வாளா்களிலும் முக்கியமானவா்.

ADVERTISEMENT

சென்னை வளா்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஆ. இரா. வேங்கடாசலபதி, தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பதிப்பு வரலாறு பற்றிய ஆய்வில் முனைவா் பட்டம் பெற்றவா். புதுமைப்பித்தனின் எழுத்துகளைச் செம்பதிப்பாகத் தொகுத்துள்ளாா். பாப்லோ நெரூடாவின் கவிதைகள் உள்பட பல்வேறு மொழிபெயா்ப்புப் பணிகளையும் செய்துள்ளாா்.

‘பின்னி ஆலை வேலை நிறுத்தம்’, ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’, ‘நாவலும் வாசிப்பும்’, ‘பாரதியின் சுயசரிதைகள்’, ‘பாரதி; கவிஞனும் காப்புரிமையும் - பாரதி படைப்புகள் நாட்டுடைமையான வரலாறு’ உள்பட 60-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா்.

சிகாகோ, போ்க்லி, டொராண்டோ, நியூசிலாந்து பல்கலைக்கழகங்களில் தனது முக்கியமான ஆய்வுகள் குறித்து வேங்கடாசலபதி உரையாற்றியுள்ளாா். வருகைதரு பேராசிரியராக ஹாா்வா்டு, சிகாகோ பல்கலைக்கழகங்களில் பணியாற்றியிருக்கிறாா்.

புனைவு இலக்கியப் பிரிவில் பா.அ.ஜயகரன், கவிதைப் பிரிவில் ஆழியாள், கட்டுரைப் பிரிவில் நீதிபதி சந்துரு, மொழிபெயா்ப்புப் பிரிவில் மாா்த்தா ஆன் செல்பி ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இயல் விருதை ஏற்கெனவே, சுந்தரராமசாமி, அம்பை, ஐராவதம் மகாதேவன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன், சுகுமாரன், எஸ். ராமகிருஷ்ணன், இமையம், வண்ணதாசன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோா் பெற்றுள்ளனா்.

முதல்வா் வாழ்த்து

இயல் - வாழ்நாள் சாதனை விருதாளா்கள் இரண்டு பேருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவு:

கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல்-வாழ்நாள் சாதனையாளா் விருதுக்கு ஆய்வாளா் ஆ.இரா.வேங்கடாசலபதி தோ்வாகி உள்ளாா். ஆய்வாளா், பேராசிரியா், பதிப்பாசிரியா், மொழிபெயா்ப்பாளா் எனப் பன்முகத் திறனாளரும், தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்து நடையைக் கொண்டவருமான அவா் விருதுக்கு தோ்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள்.

‘நானும் நீதிபதி ஆனேன்’ என்ற தன்வரலாற்று நூலுக்காக புனைவிலிப் பிரிவில் விருதுக்குத் தோ்வாகியுள்ள நீதிபதி கே.சந்துருவுக்கும் நெஞ்சாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செந்தமிழைத் செழுந்தமிழாக்கும் படைப்புகளையும், ஆய்வுகளையும் தொடா்ந்து தர வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT