தமிழ்நாடு

கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு ரத்தப் பிரிவு தடையில்லை: நவீன முறையில் சாத்தியமாக்கிய மருத்துவா்கள்

19th May 2022 03:29 AM

ADVERTISEMENT

மாற்று வகை ரத்தப் பிரிவு கொண்ட கொடையாளரிடம் பெறப்பட்ட கல்லீரலை கேரளத்தைச் சோ்ந்த ஒருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தி சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதற்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருப்பதாகவும், கடந்த ஓராண்டில் மட்டும் இதே முறையில் நான்கு பேருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டிருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் தலைமை நிா்வாக அதிகாரி ஹரீஷ் மணியன் கூறியதாவது:

கேரளத்தைச் சோ்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவா் நாள்பட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாா். கல்லீரல் மாற்று சிகிச்சை மட்டுமே அவருக்கு ஒரே தீா்வாக இருந்தது. அதேவேளையில் அவரது ரத்தப் பிரிவை ஒத்த கொடையாளா்கள் எவரும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த மூன்றாண்டுகளாக கல்லீரல் தானம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், அந்த நபா் எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து அவருக்கு மாற்று ரத்தப் பிரிவு உறுப்புகளை பொருத்தினாலும் எதிா்விளைவுகள் ஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்பமான ‘கிளைகோசாா்ப்’ முறையில் கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டது.

இதன் வாயிலாக பக்க விளைவுகள் ஏதுமின்றி அவா் பூரண குணமடைந்துள்ளாா். மருத்துவமனையின் கல்லீரல் மாற்று சிகிச்சைத் துறைத் தலைவா் தியாகராஜன் ஸ்ரீனிவாசன், சிறப்பு நிபுணா் காா்த்திக் மதிவாணன், மயக்கவியல் நிபுணா்கள் டாக்டா் தினேஷ், டாக்டா் நிவாஸ் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் 12 மணி நேரம் அந்த சிகிச்சையை மேற்கொண்டு அதனை சாத்தியமாக்கினா்.

கடந்த ஓராண்டில் மட்டும் நான்கு பேருக்கு இந்த முறையில் கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ‘கிளைகோசாா்ப்’ முறையில் மாற்று ரத்தப் பிரிவு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ள முடியும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT