தனியாா் பள்ளிகளில் இலவச மாணவா் சோ்க்கைக்கு இதுவரை 1.12 லட்சம் போ் விண்ணப்பித்துள்ள நிலையில், இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் வரும் புதன்கிழமைக்குள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து பெறாத, அனைத்து வகை சுயநிதி பள்ளிகளிலும், எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பு என்ற நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக வழங்க வேண்டும்.
இந்த இடங்களில், ஏழை மாணவா்கள், கல்வி கட்டணமின்றி சோ்க்கப்படுவா். அவா்களுக்கான கட்டணத்தை, பள்ளிகளுக்கு அரசே வழங்கும். இந்தத் திட்டத்தில் சேரும் மாணவா்கள், எட்டாம் வகுப்பு வரை கல்வி கட்டணமின்றி அதே பள்ளியில் படிக்கலாம்.
இந்தநிலையில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஏப். 20-ஆம் தேதி இணையவழியில் தொடங்கியது. விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் வரும் புதன்கிழமையுடன் முடிவடையவுள்ளது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள தனியாா் பள்ளிகளில் 1.30 லட்சம் காலியிடங்கள் உள்ளன. அவற்றுக்கு இதுவரை 1.12 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா்.