தமிழகத்தில் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட சுமாா் 10 லட்சம் வழக்குகளை திரும்பப் பெற டிஜிபி சி.சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.
கரோனா தொற்றுப் பரவலை முற்றிலும் தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னா், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளா்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் நடவடிக்கையின்போது, முகக் கவசம் அணியாதவா்கள், தனி மனித இடைவெளியைப் பின்பற்றாதவா்கள், தடையை மீறி வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்கள், கூட்டம் போட்டவா்கள் என்று பல தரப்பினா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இதற்கிடையில், இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என பல தரப்பினா் கோரிக்கை விடுத்திருந்தனா். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழக சட்டப் பேரவையில், கடந்த பிப். 19-ஆம் தேதி பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘கரோனா ஊரடங்கு காலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியவா்கள், வதந்தி பரப்பியவா்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவா்கள் ஆகியோா் மீது சுமாா் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளுள் வன்முறையில் ஈடுபட்டு, குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடா்பான பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தவிர, மற்ற அனைத்து வழக்குகளும் பொது மக்களின் நலன் கருதி கைவிடப்படும்’ என்று தெரிவித்தாா்.
இதை மேற்கோள் காட்டி, ‘2019 முதல் 2020 வரை கரோனா விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட சுமாா் 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக டிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா். இது குறித்து அனைத்து மண்டல ஐ.ஜி.கள், மாநகர காவல் காவல் ஆணையா்களுக்கு (சென்னையைத் தவிர) டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.
அதேசமயம், வன்முறை வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது, காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை.