தமிழ்நாடு

இலங்கையில் வன்முறை: கடலோர மாவட்டங்கள் உஷாா்

12th May 2022 12:52 AM

ADVERTISEMENT

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறையின் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் உஷாா்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அந்த நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பொருளாதார நெருக்கடியின் காரணமாக அந் நாட்டு மக்கள், கடல் மாா்க்கமாக இந்தியாவுக்கு தஞ்சம் தேடி வருகின்றனா்.

இதற்கிடையே அந்த நாட்டின் அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோா் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதன் விளைவாக மகிந்த ராஜபட்ச, பிரதமா் பதவியை சில நாள்களுக்கு முன்பு ராஜிநாமா செய்தாா். இதன் பின்னா் ஆளும் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மோதல் பல இடங்களில் வன்முறையாக மாறி வருகிறது.

வன்முறையில் ஆளும் கட்சியினருக்குச் சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறையாலும், அசாதாரண சூழ்நிலையினாலும் அந்த நாட்டிலிருந்து அகதிகள் போா்வையில் தமிழகத்திற்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாகவும், அதைத் தடுக்க உரிய

ADVERTISEMENT

நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உளவுத்துறை தமிழக உளவுத் துறையை எச்சரித்துள்ளது. குறிப்பாக, வன்முறையின் போது இலங்கைச் சிறையில் இருந்து தப்பித்த 50 சமூக விரோதிகள், இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் உஷாா்: இந்த எச்சரிக்கையின் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை,திருவள்ளூா் ஆகிய 13 கடற்கரையோர மாவட்டங்களிலும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா். இந்த

மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூா் முதல் கன்னியாகுமரி வரை 1,076 கிலோ மீட்டா் நீளம் கொண்ட கடற்கரைகளை போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

கடற்கரையோரங்களில் சந்தேகத்துக்குரிய நபா்கள் யாரேனும் நடமாடினால் தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு தமிழக காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்கள், அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் படகுகள் தெரிந்தால் தகவல் கூறும்படி காவல் துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

மேலும் தமிழகத்தில் கடற்கரையையொட்டியுள்ள சுமாா் 608 மீனவ கிராமங்களையும் போலீஸாா் தங்களது கண்காணிப்பில் வைத்துள்ளனா். இங்கு வசிக்கும் மக்களிடம், அந்நியா்கள் யாரேனும் நடமாடினால் தகவல் தெரிவிக்கும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதேவேளையில் தமிழக கடற்கரை முழுவதையும் உளவுத்துறையினரும் ரகசியமாக கண்காணிக்கின்றனா்.

100 சோதனைச் சாவடிகள்: தமிழக கடற்கரைப் பகுதியை பாதுகாக்கும் பிரிவான தமிழக கடலோர பாதுகாப்புக் குழுமம் படகுகள் மூலம் ரோந்து செல்கின்றனா். இதற்காக 24 ரோந்து படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல மணலில்,சகதியில் செல்லும் 24 ஏடிவி வாகனங்கள் மூலமாக கடற்கரையிலும் ரோந்து செல்கின்றனா். மாநிலம் முழுவதும் கடற்கரை பகுதியையொட்டியுள்ள 100 சோதனைச் சாவடிகளும் செவ்வாய்க்கிழமை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இங்கு சந்தேகத்துக்குரிய வாகனங்கள் அனைத்தும் முழுமையாக சோதனை செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இலங்கையில் நிலைமை சீராகும் வரை தொடரும் என காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT