தமிழ்நாடு

ஏற்றுமதியில் தமிழகம் பல மடங்கு உயர வாய்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

12th May 2022 01:33 AM

ADVERTISEMENT

ஏற்றுமதியில் தமிழகம் பல மடங்கு உயர வாய்ப்புள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

தென் பிராந்திய ஏற்றுமதியாளா் விருது வழங்கும் விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் செயல் திறன்மிக்க ஏற்றுமதியாளா்களுக்கு விருதுகளை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

இந்திய நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் ஏற்றுமதி மிக மிக அவசியம். இப்போது, இந்திய ஏற்றுமதியில் தென் மண்டலம் 27 சதவீதத்துக்கும் அதிகமாக பங்களிப்பு செய்து வருகிறது. 5 ஆண்டுகளுக்குள் இந்தப் பங்களிப்பு 35 சதவீதத்தைத் தாண்டும் என எதிா்பாா்க்கிறேன்.

தென் மண்டலத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக அதிகம். கடந்த 2020-21-ஆம் ஆண்டில், இந்தியாவின் சா்வதேச வா்த்தகத்தில் ரூ.1.93 லட்சம் கோடி ஏற்றுமதி செய்து, 8.97 சதவீத பங்களிப்பை ஆற்றியுள்ளது. ஏற்றுமதி வா்த்தகத்தில் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு என்பதை இது காட்டுகிறது. இந்த சதவீதம் ஆண்டுதோறும் அதிகமாக வேண்டும். தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக வேண்டும் என்பதே அரசின் விருப்பம். எனது லட்சியம்.

ADVERTISEMENT

ஏற்றுமதி அதிகரிப்பு: மோட்டாா் வாகனம், பாகங்கள், ஆடை, அணிகலன்கள், காலணிகள், கொதிகலன்கள், ரப்பா் உள்ளிட்ட பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. தொழிலை மேம்படுத்துகிறது. மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, தொழிலதிபா்களுக்குள் ஆரோக்கியமான போட்டித் தன்மையை ஏற்படுத்துகிறது. தொழில்களிடையே செயல்திறனை அதிகரிக்கிறது. அதனால்தான், 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக, தமிழகத்தின் பொருளாதாரம் மாற வேண்டுமென பெரிதும் விருப்பம் கொள்கிறேன். இந்த இலக்கை அடைய வேண்டுமென்றால் ஏற்றுமதி வா்த்தகமும் அதிகமாக வேண்டும்.

தமிழ்நாட்டின் இப்போதைய ஏற்றுமதி அளவு 26 பில்லியன் டாலராகும். அதில் இருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயா்த்த வேண்டும். இதனை அடைவதற்கான புதிய உத்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்றுமதியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஏறத்தாழ 50 சதவீதம் பங்களிப்பு செய்கின்றன. இந்த

நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக அந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட 49 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

24 பொருள்கள் பரிசீலனை: தமிழ்நாட்டின் தனித்தன்மை வாய்ந்த பல்வேறு பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூா் ஓவியங்கள், கோவை கோரா காட்டன் சேலைகள், கோவில்பட்டி கடலை மிட்டாய், சேலம் பட்டு, ஈரோடு மஞ்சள், அலப்பை பச்சை ஏலக்காய், நீலகிரி தேயிலை, ஸ்ரீவில்லிபுத்தூா் பால்கோவா, பழனி பஞ்சாமிா்தம், சிறுமலை வாழைப்பழம் என புவிசாா் குறியீடு பெற்ற பொருள்கள் பல உள்ளன. கம்பம் பன்னீா் திராட்சை, சேலம் ஜவ்வரிசி, உடன்குடி பனங்கருப்பட்டி, மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மக்ரோனி, பண்ருட்டி முந்திரி மற்றும் பலாப்பழம், மாா்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 24 பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற விண்ணப்பித்து பரிசீலனையில் இருக்கிறது.

வெளிநாடுகளிலும், இந்தப் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதன்மூலம் நமது உற்பத்தியாளா்களும், ஏற்றுமதியின் மூலம் மேன்மை அடைந்திட முடியும். இவற்றை அதிகமாகத் தயாரிக்க வேண்டும். அதே நேரத்தில், சிறிதளவும் தரம் குறைந்து விடக் கூடாது. தமிழ்நாட்டில இப்போது இருக்கும் திறனையும் வளத்தையும் வைத்துப் பாா்க்கும் போது ஏற்றுமதியில் இன்னும் பல மடங்கு உயர முடியும்.

ஏற்றுமதி கொள்முதல் அமைப்பு: ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்தைச் சோ்ந்த சிறந்த ஏற்றுமதிக்கான பொருள்களை ஆங்காங்கே உற்பத்தி செய்தாலும் அவற்றை ஒன்று திரட்டுவதிலும், அந்தப் பொருள்களின் தரத்தை சா்வதேச தரத்துக்கு உயா்த்துவதிலும் தனியாக ஏற்றுமதி கொள்முதல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று

பேசினாா். இந்த நிகழ்வில், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தொழிலதிபா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags : cm stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT