தமிழ்நாடு

நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

12th May 2022 06:13 PM

ADVERTISEMENT

 

சென்னை: நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு போா்க்கால நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். நூல் விலையைக் குறைக்க மத்திய அரசுக்கு தொடா்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில்,  பசப்பு வார்த்தைகள் பேசியே மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள் திமுக-வினர். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் கூறி, பின்புற வாசல் வழியாக வந்த இந்த அரசு, தனது தேர்தல் அறிக்கையில்:

"தேர்தல் வாக்குறுதி எண். 140 நெசவாளர்களுக்கு தங்குதடையின்றி நூல் கிடைக்க அரசே கொள்முதல் நிலையங்கள் அமைத்து, நெசவாளர் சங்கங்களுக்கு நூல் வழங்கப்படும். தேர்தல் வாக்குறுதி எண். 145 மற்றும் 146 கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரம் 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாகவும்; விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாகவும் உயர்த்தப்படும்." இவை யாவும் தமிழக நெசவாளப் பெருமக்களுக்கு திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள்.

ADVERTISEMENT

இந்த அரசு இவற்றை எப்போது நிறைவேற்றும்? தமிழகத்தின் 45 சதவீத நூற்பாலைகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களிலே உள்ளது. கடந்த 12 மாதங்களில் அனைத்து நூல் ரகங்களுக்கும் ஒரு கிலோவிற்கு சுமார் ரூ. 150 முதல் ரூ. 200 வரை விலை உயர்ந்துள்ளது. ஆளுநர் உரையின் போது, அனைத்து ரக நூல் விலை உயர்வு பற்றியும், அதனால் சுமார் 40 லட்சம் நெசவாளர்கள் பாதிப்படைந்துள்ளது குறித்தும், விலை உயர்வை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்றும், நான் பேரவையில் பேசினேன்.

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், சட்டப்பேரவை உறுப்பினர் தங்கமணியும் நூல் விலை உயர்வு குறித்தும், இந்த விலை ஏற்றத்தால் வாழ்வு இழந்திருக்கும் இவர்களை எப்படி மீட்கப்போகிறீர்கள் என்றும், நூல் விலை ஏற்ற இறக்கத்தைத் தவிர்க்க, நூல் விலையினை மாதம் ஒருமுறை நிர்ணயிக்கும் முறையினைக் கொண்டுவர வேண்டும் என்றும், இதன்மூலம் கைத்தறி, விசைத்தறித் தொழில் காப்பாற்றப்படும் என்றும் வலியுறுத்திப் பேசினார். 

இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் பதுக்கல், இறக்குமதி பஞ்சிற்கான வரி உயர்வு மற்றும் செயற்கைத் தட்டுப்பாடே என்றும்; நெசவுத் தொழிலைக் காக்க இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அதிமுக சாா்பில் பேரவையில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இதுவரை நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விலையை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாறாக, மத்திய அரசை, இந்த அரசு சுட்டிக்காட்டுகிறது. 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளோம் என்று கூறும் திமுக அரசும், அதன் கூட்டணிக் கட்சியினரும், நூல் விலையைக் குறைக்கவும், வெளிநாடுகளில் இருந்து பஞ்சை இறக்குமதி செய்யவும், நாடாளுமன்றத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்?

மக்களுக்கு நன்மை செய்வதாக வாய் நீளம் காட்டும் திமுக அரசின் அவலங்களையும், அலங்கோலங்களையும் மக்கள் உணர்ந்து வருகிறார்கள். சிலரை சில காலம் ஏமாற்றலாம்... பலரை பல காலம் ஏமாற்றலாம்.. . எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், நம் நாட்டுக்கு ஏற்றுமதி மூலம் பல நூறு கோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டுவதிலும் திருப்பூர் பின்னலாடைத் தொழில் முன்னணியில் இருந்தது. ஆனால் இப்போது, நூல் விலை உயர்வினால் திருப்பூர் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து நெசவாளர்களும் வேலை வாய்ப்பின்றி ஸ்தம்பித்துப் போயுள்ளனர்; மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

பஞ்சு இறக்குமதியில் உள்ள சிரமங்கள், இதனால் ஏற்பட்டுள்ள தாங்க முடியாத நூல் விலை உயர்வு, நெசவுத் தொழிலை நலிவடையச் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட நெசவாளர்களும், பின்னலாடைத் தொழிலாளர்களும் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். நெசவுத் தொழிலை நலிவில் இருந்து மீட்டெடுக்க வழிகாட்டாத திமுக அரசு, போகாத ஊருக்கு வழிகாட்டுகிறது. 

இந்த நிலை தொடர்ந்தால் நம் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறையும் நிலை ஏற்படும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறேன். 

எனவே, நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும்; நூல் விலை குறைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT