தமிழ்நாடு

சமாதியில் இருக்கிறேன்; நான் இன்னும் சாகவில்லை: நித்தியானந்தா

DIN


தன்னைத்தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்ட நித்தியானந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், சமாதியில்தான் இருக்கிறேன். நான் இன்னும் சாகவில்லை என்று நித்தியானந்தா விளக்கம் கொடுத்துள்ளார்.

"நான் இன்னும் இறக்கவில்லை.. சிவ.. சிவ.. நான் மீண்டும் வருவேன்" என்று சுட்டுரையில் பதிவிட்டு, முகநூலில் மிக நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.

நித்தியானந்தா கூறியிருப்பதாவது, 
சமாதியில் இருக்கிறேன். நான் இறந்துவிட்டதாக சிலர் புரளிகளை பரப்பி வருகிறார்கள். எனது சீடர்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால், நான் தற்போது சமாதியில்தான் இருக்கிறேன். ஆனால் இறக்கவில்லை.

பேசும் திறன் இல்லை. சொற்பொழிவாற்ற இன்னும் சில காலம் ஆகும். எனக்கு மிகவும் தெரிந்த, நெருங்கியவர்களைக் கூட அடையாளம் காண முடியவில்லை. எனக்கு சிகிச்சை அளித்து வரும் அனைத்து மருத்துவர்களுக்கும் எனது நன்றி. மருத்துவ சிகிச்சையிலிருந்து இன்னமும் வெளியே வரவில்லை. எனக்கு 27 மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகிறார்கள். பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

நித்ய சிவ பூஜை நாள்தோறும் தொடர்ந்து நடைபெறுகிறது. சாப்பிடவோ உறங்கவோ தொடங்கவில்லை. என்னை பூரணமாக பரிசோதித்த மருத்துவர்கள் எனது இதயம் 18 வயது இளைஞனைப் போல துடிப்பதாகவும், எனது உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதாகவும் தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூருவில் பிடதி ஆசிரமம் வைத்து நடத்தி வந்த நித்தியானந்தா, பெண் சீடர்களை அவர்களது விருப்பத்துக்கு மாறாக அடைத்து வைத்தல், பாலியல் புகார், கொலை வழக்கு என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

இதற்கிடையே, 2010ஆம் ஆண்டு நித்தியானந்தாவின் ரகசிய விடியோ ஒன்று தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி, அப்போதுதான் அவர் 'பெரும்' புகழுக்குச் சொந்தக்காரரானார்.

இதோடு நின்றதா இவரது சர்ச்சைகளின் வரலாறு. ஆமதாபாத் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். பிறகுதான் இந்தியா தனக்கு ஒத்துவராது என்று உணர்ந்து நாட்டிலிருந்தே வெளியேறினார். 

அவர் எங்கேயிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த போது, பலரும் விளையாட்டாகச் சொல்வதை அவர் செய்தே காட்டினார். ஒரு தீவை விலைக்கு வாங்கி, கைலாசா என்று பெயரிட்டு நாடாக அறிவித்தார். அதற்கு அவரே பிரதமர் என அறிவித்துக் கொண்டார். நாள்தோறும் காணொலியில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.

இப்படி நாள்கள் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென நித்தியானந்தாவைப் பற்றி சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. அவர் இறந்துவிட்டார் என்றும், பழைய விடியோக்களே தற்போது ஒளிபரப்பாகின்றன என்பதுதான் அது.

அதற்குத்தான் நித்தியானந்தா விளக்கம் அளித்துள்ளார். நான் சமாதியில்தான் இருக்கிறேன். இன்னும் சாகவில்லை என்பதுதான் அந்த விளக்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT