தமிழ்நாடு

ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் வேலை நேரத்தை மாற்ற முடிவு

8th May 2022 04:57 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வேலை நேரத்தை மாற்ற பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் இந்த நேர மாற்றம் அமலுக்கு வரும் என தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு நடைபெற்று வருகிறது. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மே 14-ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இனிமேல் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். முதல்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அறிவித்தாா்.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நேரத்தை மாற்ற பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதாவது மாணவா்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட உள்ளது. விடுமுறைக்கு பின் ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும் புதிய நேரம் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT