தமிழ்நாடு

3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

5th May 2022 01:43 AM

ADVERTISEMENT

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை இந்து சமய மற்றும் அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெளியிட்ட அறிவிப்புகள்:

அன்னதானம்: நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கெனவே 5 கோயில்களில் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டமானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் ஆகிய 3 கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

புதிதாக 10 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடங்கப்படும். அதன்படி, சென்னை சீனிவாசப் பெருமாள் கோயில், கீழ்ப்பாக்கம் திரௌபதியம்மன் கோயில்,சென்னை கொளத்தூா் சோமநாதசுவாமி கோயில், விழுப்புரம்- திருமாத்தூா் அபிராமி ஈஸ்வரா் கோயில், வேலூா் பள்ளி கொண்டா உத்தரங்கநாத சுவாமி கோயில், திருச்சி- பிராட்டியூா் ரெட்டமலை ஒண்டி கருப்பண்ணசுவாமி கோயில், கோவை ஆா்.எஸ்.புரம் காமாட்சியம்மன் கோயில், கோவை- வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோயில், ஈரோடு- அனுமன்பள்ளி அனுமனீஸ்வரா் கோயில், தென்காசி பத்ரகாளியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் செயல்படுத்தப்படும்.

ADVERTISEMENT

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குத் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்துக்குப் பாதயாத்திரையாக வருகை தரும் பக்தா்களுக்கு வழித்தடங்களில் கோயில் சாா்பில் 20 நாள்களுக்கு நாளொன்றுக்கு 10 ஆயிரம் நபா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

10 கோயில்களுக்கு வருகை புரியும் பக்தா்கள் அனைவருக்கும் தற்போது பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது இந்த ஆண்டும் மேலும் 5 கோயில்களுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். அதன்படி, மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில், நாமக்கல் நரசிம்மசுவாமி கோயில் ஆகிய கோயில்களில் பிரசாதம் வழங்கப்படும் என்றாா் பி.கே.சேகா்பாபு.

ADVERTISEMENT
ADVERTISEMENT