தமிழ்நாடு

அந்தமான் பகுதியில் உருவானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

5th May 2022 01:31 AM

ADVERTISEMENT

தெற்கு அந்தமான் பகுதியில் புதன்கிழமை வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவானதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இதன் காரணமாக, இப்பகுதிகளில் மே 6-ஆம் தேதி ஓா் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகா்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வியாழக்கிழமை சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

ADVERTISEMENT

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சனிக்கிழமை சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாள்களில் மீனவா்கள் குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT