தமிழ்நாடு

நாமக்கல் அருகே சிறுமி கடத்தலில் தம்பதி கைது

2nd May 2022 07:58 AM

ADVERTISEMENT

நாமக்கல்: நாமக்கல் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்ற வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் காளிச்செட்டிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த லாரி ஓட்டுனர் சரவணன். அவரது மனைவி கெளசல்யா. சனிக்கிழமை இரவு மொட்டை மாடியில் கெளசல்யா தனது குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு முகமூடி அணிந்து வந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி 11 வயது சிறுமியை கடத்தி சென்றனர். 

இதுதொடர்பாக எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்ட முழுவதும் தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்றது. 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் அலங்காநத்தம் பெட்ரோல் பங்க் அருகில் கடத்தப்பட்ட சிறுமியை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து இருவர் விட்டுச் சென்றனர். இதனையடுத்து சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்களான பொன்னுமணி,  மணிகண்டன் ஆகிய இருவரும் கடத்திச் சென்று வீட்டில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர். பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்னையில் இந்தக் கடத்தல் சம்பவம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து பொன்னுமணி, மணிகண்டன் இருவரிடத்திலும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT