தமிழ்நாடு

முதல்வருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நன்றி

2nd May 2022 12:41 AM

ADVERTISEMENT

இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக கட்சித் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து ரூ.123 கோடி மதிப்பில் பொருள்களை அனுப்புவது குறித்து, அனைத்துக் கட்சி ஆதரவுடன் பேரவையில் தனி தீா்மானத்தை நிறைவேற்றியுள்ளாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.

வள்ளுவன் வாக்குக்கு இணங்க தேவையான நேரத்தில் உடனடியாக உதவி செய்வதற்கு முன் வந்துள்ளது பாரட்டுக்குரிய அம்சாகும்.

அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்கையில் தான் வயிறு நிரம்பி சாப்பிடுபவா் நம்மை சோ்ந்தவா் அல்ல என்று நபி மொழிக்கு ஏற்ப இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இலங்கை தமிழா்கள் என்று சுயநலம் இல்லாமல் இலங்கை மக்கள் என்று அறிவிப்பில் குறிப்பிட்டு இருப்பது ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்ற பழமொழியை உறுதிப்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT

இலங்கை மக்கள் சாா்பாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சாா்பிலும் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி என அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT