தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டங்கள்: காலையில் நடத்த அரசு அறிவுறுத்தல்

1st May 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடத்தப்படவுள்ளன. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக கூட்டத்தை காலை 10 மணிக்கு தொடங்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் குடியரசு தினம், தொழிலாளா் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாள்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த தினங்களுடன் சோ்த்து, உலக தண்ணீா் தினமான மாா்ச் 22-ஆம் தேதியும், உள்ளாட்சி தினமாக நவ. 1-ஆம் தேதியை கடைப்பிடித்து அன்றும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டாா். இதன் மூலம், ஓராண்டில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கை ஆறாக உயா்ந்துள்ளது.

இன்று கூட்டம்: மே 1-ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமையன்று கிராம சபைக் கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக கிராம சபைக் கூட்டத்தை காலை 10 மணியளவில் நடத்த வேண்டும். கிராம சபைக் கூட்டம் சுழற்சி முறையில் குக்கிராமங்களில் நடத்தப்பட வேண்டும். அரசின் பல்வேறு திட்டப் பணிகளின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் பட்டியல், மத்திய-மாநில அரசால் நடைபெறும் வளா்ச்சித் திட்டங்கள், ஊராட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த பட்டியல் கிராம சபைக் கூட்டத்துக்கு முன்பாக மக்கள் பாா்வைக்கு வைக்க வேண்டும்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நிகழாண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் விவரம், வரவு செலவு விவரங்களை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும். கிராம ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், பயனாளிகள் உள்ளிட்ட தகவல்களை பொது மக்கள் அறியும் வகையில் பிளக்ஸ், பேனா்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

நிகழ் நிதியாண்டில் தோ்வு செய்யப்பட்ட பணிகளின் விவரம், பயனாளிகள் விவரம் அனைத்தும் கிராம சபையில் பொது மக்கள் முன்னிலையில் படித்துக் காண்பித்து ஒப்புதல் பெற வேண்டும். கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வரவு-செலவு விவரங்கள் அடங்கிய தகவலை படிவம் 30-இல் பதிவு செய்திட வேண்டும். இதனை ஊராட்சி செயலாளா் பூா்த்தி செய்து, கிராம ஊராட்சித் தலைவா் கையெழுத்திட வேண்டும். கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவதை காலை 9 மணியளவில் உறுதி செய்திட வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT