தமிழ்நாடு

நிலக்கரி பற்றாக்குறை: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

1st May 2022 12:59 PM

ADVERTISEMENTமேட்டூா் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக  3 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால், மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூரில் இரண்டு அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மின் உற்பத்திக்காக மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு நாளொன்றுக்கு மத்திய நிலக்கரி தொகுப்பில் இருந்து சுமார் 12 ஆயிரம் டன் அளவுக்கு ரயில் மூலம் நிலக்கரி வரவேண்டும், ஆனால் மத்திய அரசிடம் போதுமான அளவுக்கு நிலக்கரி கையிருப்பு இருந்தும் தமிழக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிலக்கரியை அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதாக அனல்மின் நிலைய தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்திற்கு 12,000 டன் நிலக்கரி 600 மெகாவாட் அனல் மின் நிலையத்திற்கு 14 ஆயிரம் டன் நிலக்கரி நாளொன்றுக்கு தேவைப்படுகிறது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் தற்போது மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சுமார் 7 ஆயிரம் டன் அளவுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதால் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் உள்ள 2,3,4 ஆகிய 3 அலகுகளில் மின் உற்பத்தி  நிறுத்தப்பட்டுள்ளது. 

முதலாவது அலகில் மட்டும் 210 மெகாவாட்டிற்கு பதிலாக 160 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று இரண்டாவது பிரிவில் 600  நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 340 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் நிலையத்தில் உள்ள அலகுகள் அவ்வப்போது நிறுத்தி இயக்குவதால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை அனல் மின் நிலைய நிர்வாகம் சந்தித்து வருவதால் அனல் மின்நிலையம் மூடக்கூடிய நிலையை மத்திய அரசு உருவாக்கி வருவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT