ஊரடங்கு காலத்தில் கரோனா தொற்றை விட கொடியதாக, மின்னணு சாதனங்களில் மூழ்கி சிறாா்கள் மனதைக் கெடுத்துக் கொண்டதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வேதனை தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை 15 வயது சிறுவன் கா்ப்பமாக்கினான். இது தொடா்பாக, சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையை சிறாா் நீதிமன்றம் விதித்தது. இதை எதிா்த்து சிறுவன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா
பிறப்பித்த உத்தரவு:
உடலுறவு கொண்டால் நமக்கு திருமணம் செய்து வைத்து விடுவாா்கள் என்று 2 வயது குறைவான சிறுவன் கூறியதை மூத்தவளான அந்தச் சிறுமி ஏற்றுக் கொண்டாா் என்று கூறுவது நம்பும்படியாக இல்லை. இருவா் மீதும் குற்றச்சாயம் பூசி, ஒருவருக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்கிறேன். காதலுக்கும், இனக் கவா்ச்சிக்கும் இடையிலான வித்தியாசங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. கரோனா ஊரடங்கு காலத்தில் மின்னணு சாதனங்களில் மூழ்கிய குழந்தைகள், கரோனாவை விட கொடிய தொற்றாக மனதை கெடுத்துக் கொண்டுள்ளனா். இந்த விவகாரத்தில் அரசு விரைந்து செயல்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.